சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக நடுக்கடலில் மீனவர்களிடையே மோதலில் 3 பேர் காயம்: 4 படகுகள் தீவைத்து எரிப்பு; பூம்புகார், வாணகிரியில் பதற்றம்

சுருக்குமடி வலையைப் பயன்படுத்துவது தொடர்பாக நடுக்கடலில் மீனவர்களிடையே மோதலில் 3 பேர் காயம்: 4 படகுகள் தீவைத்து எரிப்பு; பூம்புகார், வாணகிரியில் பதற்றம்
Updated on
1 min read

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக, மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களிடையே நடுக்கடலில் நேற்று ஏற்பட்ட மோதலில், ஒரு ஃபைபர் படகு சேதமடைந்து, 3 மீனவர்கள் காயமடைந்தனர். கரையில் 4 படகுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் இருவேறு பிரிவாக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், திருமுல்லைவாசல் மீனவ கிராமங்களைச் சேர்ந்த சுருக்குமடி வலைக்கு ஆதரவான மீனவர்கள் நேற்று தங்களின் விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

இதையறிந்த சுருக்குமடி வலைக்கு எதிரான வாணகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், அவர்களைத் தடுப்பதற்காக தங்களின் ஃபைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றனர். அப்போது, வாணகிரி மீனவர்கள் வருவதைப் பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள் கோபமடைந்து, அவர்களின் ஃபைபர் படகு மீது தங்களின் விசைப்படகை மோதினர். இதில், ஒரு ஃபைபர் படகு முற்றிலும் சேதமடைந்து, வாணகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராம்குமார், வினோத், சிலம்பரசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாணகிரி கிராம மீனவர்கள், தங்கள் கிராமத்தின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்கு சொந்தமான 4 ஃபைபர் படகுகளுக்கு தீ வைத்து எரித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதனால், வாணகிரி, பூம்புகார் ஆகிய கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், அங்கு போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, சீர்காழி கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, நாகை அக்கரைப்பேட்டையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை உட்பட 3 மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், ஆக.20-ம் தேதிக்குள் சுருக்குவலை மீனவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 3 மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த தீர்மானத்தின் நகலை நாகை ஆட்சியரிடம் புகார் மனுவாக அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in