

பள்ளிக் கட்டணம் செலுத்த முடி யாத வேதனையில் மகனைக் கொன்று கூலித் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒத்தையூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கணேசன்(42). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களது மகன் ஹரிஹரசுதன்(8). வேடசந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என ஹரிஹரசுதன் பெற் றோரிடம் கேட்டுள்ளார். ஆனால், உடனடியாக கட்டணம் செலுத்த முடியாத நிலையில் கணேசன் இருந்துள்ளார்.
இந்நிலையில் கணேசனுக்கும், மனைவி ஈஸ்வரிக்கும் நேற்று காலை வாக்குவாதம் ஏற்பட்டுள் ளது. வீட்டுச் செலவு உள்ளிட்ட எதற்கும் பணம் கொடுப்பதில்லை என கணவரை ஈஸ்வரி கண்டித் துள்ளார். பின்னர், தனது நகையை அடகுவைத்து பள்ளிக் கட்டணம் செலுத்த முடிவு செய்து பணம் ஏற்பாடு செய்ய, தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
இந்நிலையில், வீட்டில் அழுதுகொண்டிருந்த ஹரிஹர சுதனை பள்ளிக்குச் செல்லும்படி கணேசன் கண்டித்துள்ளார். ஆனால், பள்ளிக் கட்டணம் கொண்டு சென்றால்தான் பள்ளிக் குள் அனுமதிப்பர் என ஹரிஹர சுதன் அழுதபடியே தெரிவித்துள் ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், தனது மகனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.
சிறிதுநேரம் கழித்து பணம் வாங்கிக்கொண்டு வந்த தாய் ஈஸ்வரி, வீட்டில் மகன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த வேடசந்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தந்தை கணேசனை போலீஸார் தேடிய நிலையில், வீட்டின் பின்புறம் சிறிது தூரத்தில் இருந்த தோட்டப் பகுதியில் விஷம் குடித்து கவலைக்கிடமான நிலையில் கணேசன் கட்டிலில் படுத்துக் கிடந்தார்.
அவரை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.