

மதுரை ஆதீனம் குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர், நேற்று இரவு முக்தியடைந்த நிலையில் இன்று மாலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது உடலுக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள், அனைத்து மதத்தைச் சேர்ந்த பிரமுகர்கள், மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை ஆதீனமாக இருந்த குருமகா சன்னிதானம் அருணகிரி நாதர் சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 8ம் தேதி இவர் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப்பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சைப் பலனளிக்காமல் முக்தியடைந்தார். அவருக்கு வயது வயது 77.
சைவ சிந்தாந்தத்தில் புலமை பெற்ற இவர், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை முடித்த அவர், தருமை ஆதீனத்தில் பயிற்சி பெற்று மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமாக அருணகிரிநாதருக்கு 1975ம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டது. 1980 ஆம் ஆண்டு அவர் அதற்கான பதவியேற்றுக் கொண்டார்.
நேற்று இரவு மருத்துவமனையில் முக்தியடைந்த நிலையில் அவரது உடல் பீடத்தோடு மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள மதுரை ஆதீனம் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை முதல் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் மதுரை ஆதீனம் அமைந்துள்ள தெற்கு ஆவனிமூல வீதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணகிரிநாதருக்கு அஞ்சலி செலுத்தினர். பிற மதத்தினரும் வந்து அஞ்சலி செலுத்தினர். பட்டியலின மக்களும் அதிகளவு வந்து அஞ்சலி செலுத்தினர்.
தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்ததால் சென்னையில் இருந்த மதுரை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி நேற்று அங்கிருந்து இரவோடு இரவாக புறப்பட்டு வந்து ஆதீனம் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் அக்கட்சியினர் ஆதீனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
செல்லூர் கே.ராஜூ கூறுகையில், ‘‘மதுரை ஆதீனம் அருணகிரி நாதர், சிறந்த சமய மற்றும் தமிழ் சொற்பொழிவாளர். அனைத்து மதத்தினன் ஸ்லோகங்களை செய்யக்கூடியவர். குரான், பைபிள் பற்றிய ஞானம் பெற்றவர். பல்மொழி திறமை பெற்றவர். எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் அன்பு, பாசம் உள்ளவர். 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்காக தமிழகம் முழுவதும் சென்று பிரச்சாரம் செய்தவர். அப்போது அவர் மீது பல்வேறு விமர்சனங்களை வைத்தனர். அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிமுக வெற்றிக்காக உழைத்தவர். என்னுடைய மேற்கு தொகுதியிலே எனக்காக இரண்டு முறை வந்து பிரச்சாரம் செய்தவர். அவரது முக்தி மதுரை மக்களுக்கு மட்டுமில்லாது எங்களுக்கும் பெரிய இழப்பாகக் கருதுகிறோம். ’’ என்றார்.
திருவாவடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், தருமை ஆதீனம், கோவை காமாட்சிபுரம் ஆதீனம், கோவை போரூர் ஆதீனம், திருச்சி ஆதீனம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஆதீனங்கள் இன்று மதுரைக்கு வந்து மதுரை ஆதீனம் அஞ்சலி மற்றும் அடக்கம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்து மககள் கட்சி அர்ஜூன் சம்பத், பார்வர்டு பிளாக் முன்னாள் எம்எல்ஏ கதிரவன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் திருமாறன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவர் விஷ்வநாதன், நாஞ்சில் சம்பத், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருமாவளவன் கூறுகையில், ‘‘ஆதீனம் மறைவு தமிழ்ச் சமூகத்திற்கும், சைவ சமயத்திற்கும் பேரிழப்பாகும். அவர் ஆன்மீக தளத்தில் மட்டுமின்றி மதநல்லிணக்கம், ஈழத்தமிழர் விடுதலை, தமிழ் வழிபாடு தமிழில் குடமுழுக்கு போன்ற பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கும் கருத்து முன்மொழிந்தவர் ’’ என்றார்.
அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் கா.டேவிட் அண்ணாத்துரை தலைமையில் அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அவர் கூறுகையில், ‘‘அருணகிரி நாதர் 40 ஆண்டு காலம் சைவ தொண்டை சிறப்புற செய்தவர். ஜெயலலிதா மீது பற்று கொண்டவர். மதுரை மட்டுமின்றி தமிழ்கூறும் நல்லுலகைச் சேர்ந்தவர்களிடமும் அன்பு கொண்டிருந்தார். அருணகிரிநாதரின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் அடுத்து வரும் ஆதினமும் செயல்படுத்த வேண்டும்’’ என்றார். அஞ்சலி நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றபிறகு ஆதீனம் அருணகிரி நாதர் உடலுக்கு புதிய ஆதீனமாக பதவியேற்பதாகக் கூறப்படும் சுந்தரமூர்த்தி, சீடர்கள் பாலாபிஷேகம், பன்னீர், இளநீர், தீபாராதனை காட்டினர்.
அதன்பிறகு வண்ணமலர்களால் சூளப்பட்ட ரதத்தில் ஆதீனம் உடல் ஏற்றபட்டு தெற்கு ஆவனிமூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்திலிருந்து நான்கு சித்திரை வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று முனிச்சாலையில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தொடர்ந்து 10 நாட்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அபிஷேகம் நடக்க உள்ளது. அதன்பிறகே புதிய ஆதீனத்திற்கு 293வது சன்னிதானம் பட்டம் சூட்டப்படுகிறது.
முதல்வர் மவுன அஞ்சலி:
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தில் அதற்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. விழா தொடங்கும்போது குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், முதல்வர் ஸ்டாலிடம், மதுரை ஆதீனம் முக்தியடைந்ததிற்கு ஒரு நிமிடம் மவுனம் அஞ்சலி செலுத்த வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள்படி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள் மதுரை ஆதீனத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
முஸ்லிம்கள் துவா செய்து வழிபாடு:
மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மாவட்ட தலைவர் லியாகத் அலி தலைமையில் இஸ்லாமிய மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து, அவர்கள் மதப்படி துவா ஓதி வழிபாடு செய்து ஆதீனம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து மாவட்ட தலைவர் லியாகத் அலி கூறுகையில், ‘‘மதுரை ஆதீனம் அருணகிரி எல்லோரிடமும் நெருங்கி பழகக்கூடியவர். இஸ்லாமிய நிகழ்ச்சிகள், மிலாது விழாவில் கலந்து கொள்ள கூடியவர். இஸ்லாமிய நண்பர்கள் கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.
நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற சிறப்பு மிக்க பாடலை பல மேடைகளில் பாடியுள்ளார். அனைத்து மதமக்களிடம் நல்லிணக்கத்தோடு வாழ்ந்தார். அவரது இழப்பு வருத்தத்திற்குரியது.
அவரை இழந்து தவிக்கக்கூடிய சமய நல்லிணக்க பெரியவர்களுக்கும், அவரது சீடர்களுக்கும் எங்கள் கவலையைத் தெரிவிக்கிறோம். மறைந்த ஆதீனத்தின் புகழ் ஓங்கி நிற்கும், ’’ என்றார்.