

ஒரு வாரத்திற்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட முன்பதிவு செய்துவிட்டதால் புதிதாக யாரும் தடுப்பூசி போடப் பதிவு செய்யமுடியவில்லை.
கிராமங்களுக்கு அதிகமாகவும், நகர்புறபுறங்களுக்கு பற்றாக்குறையாகவும் தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் இதுவரை 52,387 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தினமும் 20 முதல் 30 பேர் வரை புதிதாக இந்த தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைந்ததால் அரசு மருத்துவமனைகள், தற்காலிக கரோனா வைரஸ் தொற்று மையங்களில் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது.
ஆனாலும், தொற்றை முழுமையாக தடுக்க முடியவில்லை. பொது இடங்களில் முகgகவசம் அணியாமல் அலட்சியமாக பொதுமக்கள் நடமாடுகின்றனர். விரைவில் மூன்றாவது கரோனா தொற்று அலை வருவதாக கூறப்படுவதால் அதற்கான முன்னெச்சரிகை நடவடிக்களை சுகாதாரத்துறையினர் செய்து வருகின்றனர். இந்தத் தொற்று நோயை முழுமையாகத் தடுக்க பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 8,89,269 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளனர்.
தினமும் சராசரியாக 7 ஆயிரம் முதல் 8 ஆயிரும் பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இன்று ஒரே நாளில் 7,202 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், தடுப்பூசி தொடர்ந்து பற்றாக்குறையாக விநியோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மொத்தமே 350 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளன. அதே நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 25,600 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிகமாகவும், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு குறைவாகவும் தடுப்பூசி விநியோகம் செய்யப்படுவதே இந்த பற்றாக்குறைக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளை பொறுத்தவரையில் தடுப்பூசி போட விரும்புறகிறவர்கள் மாநகராட்சி இணையத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும். இதில், அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் மாநகராட்சி இளங்கோவன் பள்ளியில் செயல்படும் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட பதிவு செய்ய முயன்றால் அதில், ‘‘இளங்கோவன் பள்ளியில் அடுத்த ஒரு வாரத்திற்கு தடுப்பூசி போடுவதற்கான ஒதுக்கீடு நிரம்பிவிட்டது, ’’ என்று தகவல் வருகிறது.
அதனால், தடுப்பூசி போடவே பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மக்கள் தொகை நெருக்கம் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், அரசு ராஜாஜி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகளை அதிகமாக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.