விவசாயி காலில் கிராம உதவியாளர் விழுந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்: தாக்கிய வீடியோ வெளியானது

விவசாயி கோபால்சாமியைத் தாக்கும் கிராம உதவியாளர் முத்துசாமி.
விவசாயி கோபால்சாமியைத் தாக்கும் கிராம உதவியாளர் முத்துசாமி.
Updated on
2 min read

கோவை அருகே ஆவணம் பார்க்க வந்த விவசாயியின் காலில், கிராம உதவியாளர் விழுந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விவசாயியை, கிராம உதவியாளர் தாக்கிய வீடியோ வெளியானது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) அலுவலகம் உள்ளது. இங்கு வி.ஏ.ஓவாக கலைச்செல்வி, அவரது உதவியாளராக முத்துசாமி (56) பணியாற்றி வந்தனர். இங்கு கடந்த 6-ம் தேதி கோபிராசிபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபாலசாமி (38), தனது இடம் தொடர்பான ஆவணங்களைச் சரிபார்க்க வந்தார். அப்போது வி.ஏ.ஓ கலைச்செல்விக்கும், விவசாயி கோபாலசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வி.ஏ.ஓக்கு ஆதரவாக முத்துசாமி பேசியுள்ளார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து சிறிது நேரத்தில், கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபாலசாமியின் காலில் விழுந்து கதறி அழுதார். இந்நிகழ்வை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக மறுநாள் பரவியது. வீடியோ வெளியானதைத் தொடர்ந்து மேற்கண்ட சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, மாவட்ட வருவாய் அலுவலருக்கு, ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் லீலாஅலெக்ஸ் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினமும் அன்னூர் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது கடந்த 6-ம் தேதி இரவே, ‘‘ஆவணம் சரிபார்க்கச் சென்ற தன்னை, கிராம உதவியாளர் முத்துசாமி தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியதாகவும், இதற்கு வி.ஏ.ஓ கலைச்செல்வி உடந்தையாக இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என கோபாலசாமி அன்னூர் போலீஸில் புகார் அளித்தது தெரியவந்தது. இப்புகார் குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், மறுநாள் முத்துசாமி காலில் விழும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே மேற்கண்ட காலில் விழுந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய அன்னூர் போலீஸார், 8-ம் தேதி கோபாலசாமி மீது இரண்டு வழக்குகள் பதிந்தனர். வி.ஏ.ஒ கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கோபால்சாமி மீது முதல் வழக்கு பதியப்பட்டது. அதேபோல்,‘சாதி பெயரைக் கூறித் திட்டி, காலில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு கூறினார்,’’ என முத்துசாமி அளித்த புகாரின் பேரில், மிரட்டல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கோபால்சாமி மீது இரண்டாவது வழக்குப்பதியப்பட்டது. வழக்கு குறித்து போலீஸார் விசாரித்து வந்தனர், கோபால்சாமி கைது செய்யப்படவில்லை.

இரண்டாவது வீடியோ

இந்நிலையில், கிராம உதவியாளர் முத்துசாமி, விவசாயி கோபாலசாமியை வி.ஏ.ஓ அலுவலகத்தில் வைத்துத் தாக்கும் வீடியோ இன்று (ஆக.14) சமூக வலைதளங்களில் வெளியானது. ஒரு நிமிடம் 12 நொடிகள் ஓடும் அந்த வீடியோவில்,‘தனது இடம் தொடர்பான ஆவணத்தில் பெயர் மாற்றப்பட்டது தொடர்பாக, வி.ஏ.ஓ கலைச்செல்வியிடம், விவசாயி கோபாலசாமி கேட்கிறார். அதற்கு வி.ஏ.ஓ பதில் அளிக்கிறார்.

இருவருக்கும் தகராறு முற்றிய நிலையில், உதவியாளர் முத்துசாமி அங்கு வந்து தகாத வார்த்தைகளைக் கூறி, விவசாயி கோபாலசாமியைக் கன்னத்தில் அறைந்ததும், இதில் கோபால்சாமி நிலைதடுமாறிக் கீழே விழுந்து விடுகிறார். எப்போது பார்த்தாலும் தன்னை சாதி பெயரைக் கூறி திட்டுகிறார் என முத்துசாமி குற்றம் சாட்ட, தான் அவ்வாறு திட்டவில்லை என கோபால்சாமி மறுப்பு தெரிவிக்கிறார்,’’ இத்துடன் வீடியோ முடிகிறது.

விவசாயியைத் தாக்கிய முத்துசாமி, அதை மறைத்து, தான் எதிர்பாராத விதமாகத் தள்ளிவிட்டதாக போலீஸாரிடம் தவறான தகவல்களை அளித்துள்ளார் என்பது தெரியவந்தது. இதே தவறான தகவலை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் நடத்திய விசாரணையிலும் தெரிவித்துள்ளார் எனவும் தெரியவந்தது. இந்த வீடியோ விவகாரமும் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட வி.ஏ.ஓ கலைச்செல்வி, கிராம உதவியாளர் முத்துசாமி ஆகியோரைப் பணியிடம் மாற்றம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். இவர்களுடன் மேலும் 9 வி.ஏ.ஓக்கள் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.

குற்றவியல் நடவடிக்கை

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘மேற்கண்ட விவகாரம் தொடர்பாக முதல்கட்டமாக, சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., உதவியாளர் ஆகியோர் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அதன் இறுதியில் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in