

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் சட்டரீதியாக சந்திப்பேன் என எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து இன்று (ஆக.14) கோவை விமானநிலையம் வந்த எஸ்.பி.வேலுமணிக்கு அதிமுக தொண்டர்கள் திரண்டு, மேளதாளங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.
அப்போது, எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''திமுக அரசால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என் மேல் பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன் காரணமாக, எனது உறவினர்கள், எனக்கு சம்மந்தமில்லாத நிறைய இடங்களிலும் காவல்துறையை ஏவி சோதனைகளை நடத்தினர்.
இதை சட்டரீதியாக சந்திப்போம். சோதனையின்போது ரூ.13 லட்சம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது. அதுபோன்று எதையும் அதிகாரிகள் எடுத்துச்செல்லவில்லை.
வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக வெளியான தகவலும் தவறு. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நாங்கள் நீதிபதிகளை நம்புகிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் சந்திப்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக ஒற்றுமையாக இருக்கவும், முந்தைய ஆட்சி தொடரவும் நான் முக்கியக் காரணம். இதெல்லாம்தான் திமுகவினருக்கும், அக்கட்சித் தலைவருக்கும் என்மேல் கோபம் ஏற்படக் காரணம்.
சோதனை நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியினர், பொதுமக்கள் எனக்கு உறுதுணையாக இருந்தனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.