Published : 14 Aug 2021 04:55 PM
Last Updated : 14 Aug 2021 04:55 PM

திமுக அரசின் முதல் பட்ஜெட்; 'விடியலை நோக்கி' அல்ல - 'விரக்தியை நோக்கி' உள்ளது: ஓபிஎஸ் விமர்சனம்

ஓபிஎஸ்: கோப்புப்படம்

சென்னை

திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை 'விரக்தியை நோக்கி' மக்களை அழைத்துச் சென்றிருக்கிறது என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஆக. 14) வெளியிட்ட அறிக்கை:

"விடியலை நோக்கி என்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி, 'எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம்', 'மாதம் ஒரு முறை மின் கட்டணம்', 'முதியோர் உதவித் தொகை 1,500 ரூபாயாக அதிகரிப்பு', 'கல்விக் கடன் ரத்து', 'நகைக் கடன் ரத்து', 'மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய்', '60 வயதுக்கு மேற்பட்டோரின் உதவித் தொகை 1,500 ரூபாய்' உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை 'விரக்தியை நோக்கி' மக்களை அழைத்துச் சென்றிருக்கிறது.

நிதி அமைச்சரால் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையையும், திமுகவின் தேர்தல் அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், வாக்களித்த மக்களை திமுக வஞ்சித்துள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.

இது மட்டுமல்லாமல், தமிழகத்தின் நிதி நிலைமையை முன்கூட்டியே நன்கு அறிந்திருந்தும், ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் அளித்ததும் இந்த அறிக்கை மூலம் அம்பலப்படுத்தப்பட்டு உள்ளது.

2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது, 2021-2022 ஆம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, நீதித் துறை நிர்வாகம், நெடுஞ்சாலைகள் துறை, உயர் கல்வித் துறை, மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை, எம்ஜிஆர் மதிய உணவு திட்டம் மற்றும் குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது.

2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில், உணவு மானியத்துக்கான ஒதுக்கீடு 9,604.27 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், திருத்திய நிதிநிலை அறிக்கையில், 8,437.57 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. 2021 மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை 5.24 லட்சம் பேர், அதற்கு முன்பாக 1.72 லட்சம் பேர், ஆக மொத்தம் 7.17 லட்சம் பேர் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்ததில், 4.52 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், 1,166.70 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருப்பது, சில பயனாளிகளுக்கு பொருட்கள் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிடுமோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் பருப்பு வகைகள் மற்றும் சமையல் எண்ணெய் வழங்குவது தொடரும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்ற அதே நேரத்தில், 'ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை', 'மீண்டும் உளுத்தம் பருப்பு' போன்ற வாக்குறுதிகள் பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏழை எளிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இதேபோன்று பள்ளிக் கல்வித் துறையை எடுத்துக் கொண்டால், 2021-2022 ஆம் ஆண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கையில், 34,181.73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், திருத்திய நிதி நிலை அறிக்கையில் 32,599.54 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 1,582.19 கோடி ரூபாய் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கூடுதலாக இருக்கிறது என்ற தகவல் வருகின்ற இந்தத் தருணத்தில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருப்பது சரியான நடவடிக்கை அல்ல என்று மக்கள் கருதுகிறார்கள்.

'பழைய ஓய்வூதியத் திட்டம்' உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அறிவித்து அதன்மூலம் அவர்களின் வாக்குகளைப் பெற்றுவிட்டு, இன்று இயல்பாக அவர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை கூட அடுத்த ஆண்டுக்குத் தள்ளி வைத்திருப்பது அவர்களை பெருத்த ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

'பெட்ரோலுக்கான விலை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும்' என்றும், 'டீசலுக்கான விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும்' என்றும் தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு, நிதிநிலை அறிக்கையில் பெட்ரோலுக்கு மட்டும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு இருக்கிறது.

திமுக அரசு 7-5-2021 அன்று ஆட்சிப் பொறுப்பையேற்றபோது, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93 ரூபாய் 17 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 86 ரூபாய் 65 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்கு மேலாகியுள்ள சூழ்நிலையில், 13-8-2021 அன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாய் 39 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது, திமுக அரசு அமைந்த பிறகு, பெட்ரோல் விலை 9 ரூபாய் 32 காசாகவும், டீசல் விலை 8 ரூபாய் 25 காசாகவும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பெட்ரோலுக்கு மட்டும் 3 ரூபாய் வரி குறைப்பு என்பதும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் டீசலுக்கான விலை குறைப்பு பற்றி ஏதும் குறிப்பிடப்படாதது என்பதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் என, ஒவ்வொன்றையும் விரிவாக பட்டியலிட்டு, அதனை பிற மாநிலங்களுடனும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியுடனும் ஒப்பிட்டு, நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட்டதையும், இன்றைய திருத்திய நிதிநிலை அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், மாற்றத்துக்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

கனிமங்கள் மற்றும் சுரங்கங்களில் ஏற்படும் வருவாய் இழப்பை சரி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதைத் தவிர புதிதாக வருவாய் வருவதற்கான வழிமுறைகள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.

அதிமுக அரசால் தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்த திருத்திய நிதிநிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன், செலவு ஆகியவை அதிகரிக்கப்பட்டு வருவாய் குறைந்து இருக்கிறது.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த நிதிநிலை அறிக்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், சாதனைகளே இல்லாத சோதனைகள் நிறைந்த வேதனையான நிதிநிலை அறிக்கை".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x