Published : 14 Aug 2021 04:47 PM
Last Updated : 14 Aug 2021 04:47 PM

பால்வளத்துறை என்பது ஆவின் மட்டுமல்ல; ஏமாற்றமளிக்கும் வேளாண் பட்ஜெட்- பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

பால்வளத்துறை என்பது ஆவின் மட்டுமல்ல. பால் உற்பத்தியாளர்கள் நலன் காத்திட, அதன் கொள்முதல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் புறக்கணித்திருப்பதைக் கண்டிக்கிறோம் என்று பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியில் தமிழகம் முழுவதும் பல லட்சம் விவசாயப் பெருமக்கள் தங்களின் குடும்பத்தினரோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு நாளொன்றுக்கு சுமார் 2 கோடி லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்து தமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லாத, தன்னிறைவு அடைந்த மாநிலமாக வழி நடத்தி வரும் சூழலில் தமிழக பால்வளத்துறை என்பது ஆவினுக்கு மட்டுமே சொந்தமானது என்பது போன்ற மாயத்தோற்றம் கடந்த காலங்களில் நிலவி வந்தது. இந்நிலை தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது வேதனையளிக்கிறது.

மேலும் ஆவின் மட்டுமே பால்வளத் துறையின் அங்கம் போல் கடந்த கால ஆட்சியாளர்களாலும், அதிகாரிகளாலும் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்டு, தனியாருக்குப் பால் வழங்கும் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்கள் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தற்போதைய தமிழக அரசின் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளதும், தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்தப் பால் உற்பத்தியாளர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு அறிவிப்பும் வேளாண்மைக்கான தனி பட்ஜெட்டில் இடம்பெறாததும் எங்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

கரும்பு, நெல் கொள்முதலுக்கு ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டிருக்கும்போது உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் உற்பத்தியாளர்கள் நலன் காத்திட, அதன் கொள்முதல் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் புறக்கணித்திருப்பதையும், ஆவினுக்குப் பால் வழங்கும் உற்பத்தியாளர்களைத் தவிர மற்ற பால் உற்பத்தியாளர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இந்த அரசும் நடத்துவதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதைக் கண்டு மனம் வெதும்பிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என அப்போதைய அரசுக்கு வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டதை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இந்நேரத்தில் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

எனவே பால்வளத்துறை என்பது ஆவினுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பால் உற்பத்தியாளர்கள், பால் முகவர்கள் மற்றும் பால்வளத் துறை சார்ந்த தொழிலாளர்களை உள்ளடக்கியதுதான் என்பதை அத்துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகளுக்குத் தமிழக முதல்வர் அறிவுறுத்த வேண்டும் எனவும், பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை தொடர்பாக அரசு சார்பில் ஒட்டுமொத்தக் கொள்கை முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x