

ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் ஆகிய அறிவிப்புகளுக்குத் தமிழறிஞர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர் பா. இறையரசன் இன்று (ஆக. 14) வெளியிட்ட அறிக்கை:
"பொறுப்பேற்ற நாள் முதல், மிகக்கொடிய கரோனா தொற்றுநோய்க்காலம் என்பதால், விரைந்து படிப்படியே முன்னுரிமை தந்து செய்ய வேண்டியவற்றைப் படிப்படியே செய்து வருவதைப் பாராட்டுகிறோம்.
பேருந்துகளில் திருக்குறளை எழுதித் திருவள்ளுவர் படத்தையும் வைக்க ஆணையிட்டதைப் பாராட்டுகிறோம். ராஜேந்திர சோழன் விழாவைத் தமிழக அரசு சிறப்பாக நடத்தும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்.
மேலும், கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம், அரியிலூர் பகுதியில் புதைபடிவ (ஃபாசில்ஸ்) காட்சியகங்கள், கலைஞர் செம்மொழி விருதளிப்பு தொடர்தல், தடுப்பணைகள் அமைத்தல் முதலியவற்றுக்கு அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மேலும், அரசுக்குச் சில வேண்டுகோள்கள்:
1. தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கும், கடலூர் துறைமுகத்துக்கும் ராஜசராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டுகிறோம்.
2. சென்னை திருச்சி விரைவு ரயிலுக்குச் சூட்டப்பட்டிருந்த சோழன் விரைவுவண்டி / Cholan Express என்ற பெயர் நீக்கப்பட்டுச் 'சென்னை விரைவுவண்டி' என்றே பதிவுகளில் எழுதி வருகின்றனர். இவ்வண்டிக்கு ராஜராஜ சோழன் / Rajaraja Cholan Express என்று பெயரமைக்க வேண்டுகிறோம்.
3. மத்திய அரசு ஓர் கப்பலுக்கு ராஜேந்திர சோழன் பெயரை இட்டுப்பின் நீக்கிவிட்டது. அதனை மீட்டமைக்க வேண்டுகிறோம்.
4. ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிக்குப் பேரரசன் ராஜேந்திர சோழன் பெயர் சூட்ட வேண்டுகிறோம்.
5. சென்னை விமான நிலையத்தின் இரு முனையங்களுக்கு இடப்பட்ட அண்ணா, காமராஜர் பெயர்கள் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அவை மீட்டமைக்கப் பெற வேண்டுகிறோம்.
6. குடந்தை பழையாறை அருகில் உள்ள உடையாளூரில் ராஜராஜன் நினைவு மண்டபம் கட்டவும் வேண்டுகிறோம்.
7. திருக்கோயில்களில் சித்த மருத்துவமனைகள், நூலகங்கள் இயங்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.
8. மைசூரில் உள்ள தமிழ்க்கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகளைத் தமிழகம் கொண்டுவரவும் பதிப்பிக்கவும் வேண்டுகிறோம்.
9. கம்பம் பள்ளத்தாக்கில் தமிழக எல்லைக்குள் உள்ள கண்ணகி கோயிலுக்குச் செல்லும் சாலையின் ஒரு பகுதி கேரள வனத்துறையினருடையது என்பதால் தமிழகத்தில் உள்ள பளியன்குடி வழியே சாலை அமைக்க வேண்டுகிறோம்.
10. பல்லாவரம் மலை உலகின் முதல் கற்கோடரித் தொழிற்சாலை என தொல்வரலாற்று ஆய்வாளர் புரூஸ்புட்டு அவர்களால் 30-05-1861 இல் நிறுவப்பட்டது. அங்கே மலைமேல் பெரிய பெயர்ப்பலகை அமைப்பதுடன் அருங்காட்சியகமும் அமைக்க வேண்டுகிறோம்.
இதனால், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு எதிரில் உள்ளதால் சிறந்த வரலாற்று மையமாகவும் சுற்றுலாத்தலமாகவும் மாறும்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.