

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மத்திய அரசு தனது பங்கைக் குறைத்து விட்டபோதும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளதாக வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) தாக்கல் செய்தார். அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:
''வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களினால், பயிர்ச் சேதம் ஏற்படும்போது, விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்ற காரீஃப் 2020 பருவத்திற்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக 107 கோடியே 54 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சிறப்புப் பருவத்திற்கு காப்பீட்டு கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக 304 கோடியே 23 லட்சம் ரூபாய், முதல் தவணையாகக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
தற்போது இரண்டாவது தவணையாக 1,248 கோடியே 92 லட்சம் ரூபாய் தொகையினை விரைவில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுவித்து, சென்ற ஆண்டில் சம்பா நெற்பயிருக்கான இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குக் கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்திற்கான காப்பீட்டுக் கட்டணத் தொகையில் மத்திய அரசு தனது பங்கைக் குறைத்து விட்டதால், மாநில அரசின் பங்கு கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் கடும் நிதி நெருக்கடி உள்ள நிலையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துவது மிகவும் சவாலாகவும் கடினமாகவும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, தமிழக முதல்வர் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் காப்பீட்டுக் கட்டண மானிய விகிதத்தினை மீண்டும் மாற்றி நிர்ணயிக்கும்படி, கோரியுள்ளார்.
எனினும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, 2021-2022 ஆம் ஆண்டில், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த அரசு முடிவெடுத்து, இதற்காக 2327 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.''
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.