

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழி சாலை திட்டம் உட்பட பல்வேறு சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.17.899.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்பில் கூறியிருப்பதாது:
நாட்டிலேயே அதிக அளவிலான தார் சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளன. 2.61 லட்சம் கி.மீ சாலைகளில் 61,131 கி.மீ. சாலைகள் மாநில நெடுஞ்சாலையாகவும் 6,606 கி.மீ., தேசிய நெடுஞ்சாலையாக பராமரிக்கப்படுகின்றன. மாநில நெடுஞ்சாலைத் துறையின் கீழ் உள்ள சாலை அமைப்பு, ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்துக்கான பட்ஜெட் ரூ.5,421.41 கோடி. அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கக்கூடிய 2,200 கி.மீ சாலைகளை 4 வழிச் சாலைகளாகவும் வட்ட தலைமையகத்தை இணைக்கும் 6,700 கி.மீ. ஒற்றை மற்றும் இடைநிலை வழிச் சாலைகளை இரட்டை வழி நெடுஞ்சாலைகளாக மேம்படுத்துவதே அரசின் நோக்கமாகும். தற்போது புறவழிச் சாலைகள் இல்லாத 59 நகராட்சிகளுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கிராண்ட் சவுத் டிரங்க்(ஜிஎஸ்டி) சாலை மாநிலத்தின் பொருளாதாரத்திற்கான முதுகெலும்பாகும். இந்த தேசிய நெடுஞ்சாலையை 6 மற்றும் 8 நெடுஞ்சாலையாக மொத்த தூரத்துக்கும் மேம்படுத்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சென்னை - கன்னியாகுமரி தொழில் பெருவழித் திட்டத்தின் கீழ் ரூ.6,448.24 கோடி மொத்த செலவில் 589 கி.மீ. நீளமுள்ள 16 மாநில நெடுஞ்சாலைப் பெருவழிகள் மேம்படுத்தப்படும். இதனால் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளுடன் சிறந்த இணைப்பை பெறுவது உறுதி செய்யப்படும்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் 2-வது கட்டமாக ரூ.663 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். ரூ.1,750 கோடி நிதி ஒதுக்கீட்டில் சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும். நெடுஞ்சாலைத் துறையின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ.17,899.17 கோடியாக இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.