மின்சாரத் துறைக்கு ரூ.19,873 கோடி ஒதுக்கீடு- மின் உற்பத்தி திறன் 17,980 மெகாவாட் உயரும்

மின்சாரத் துறைக்கு ரூ.19,873 கோடி ஒதுக்கீடு- மின் உற்பத்தி திறன் 17,980 மெகாவாட் உயரும்
Updated on
1 min read

தமிழக பட்ஜெட்டில் மின்சாரத் துறைக்கு ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 17,980 மெகாவாட் மொத்த மின்உற்பத்தி திறன் கூடுதலாக சேர்க்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள மொத்த மின்உற்பத்தி திறன் 32,646மெகாவாட் ஆக உள்ளது. இருப்பினும் உச்சபட்சமாக 16,846 மெகாவாட் மின்தேவை ஏற்படும்போது, உண்மையில் அதிகபட்சமாக 14,351 மெகாவாட் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. சுமார் 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது. தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் சந்திக்கும் பெரும் நிதி இழப்புகள் முற்றிலும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன.

ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ள சென்னை - கன்னியாகுமரி தொழில் பெருவழித்தடம் மின்துறை முதலீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகம், மின்தொடரமைப்புக் கழகம் ஆகிய நிறுவனங்களின் மறுசீரமைப்பு விரிவாக ஆய்வு செய்யப்படும். மின் வாரிய நிறுவனங்கள் நொடிந்து போகாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

செலவினங்களைக் குறைக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உருவாக்கப்பட்டு விநியோக மட்டத்தில் ஒருங்கிணைக்கப்படும். விலைப் பட்டியல் இடுதல் மேம்படுத்தப்பட்டு, மின் சேமிப்பு ஊக்குவிக்கப்படும். பல்வேறுகூட்டு நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் நிதிநிலையை அரசு மீட்டெடுக்கும்.

மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளவாறு, சொந்த அனல் மின் உற்பத்தி நிறுவுதிறன் 4,320 மெகாவாட் மட்டுமே. அவற்றில் 2,520 மெகாவாட் மின் உற்பத்தி செய்கின்ற 12 அலகுகள் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்பதால், விரைவில் அவற்றை மாற்ற வேண்டும்.

மின் பற்றாக்குறை இருக்காது

தமிழகத்துக்கு போதிய மின்சாரம் வழங்குவதற்கு உத்தரவாதம் அளிப்பதோடு, தமிழகம் நெடுங்காலம் வரைமின் பற்றாக்குறை இல்லாத மாநிலமாக இருப்பதை உறுதி செய்யும் வகையில், தற்போது நிறுவப்பட்டுள்ள மின் உற்பத்தி திறனை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் முறையாக உயர்த்தவும் அரசு உறுதிபூண்டுள்ளது. அடுத்த10 ஆண்டுகளில் சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் வாயிலாக, 17,980மெகாவாட் மொத்த மின்உற்பத்தி திறன்கூடுதலாக சேர்க்கப்படும். தடையற்றமின்சாரம் வழங்குவதை உறுதிசெய்யும் வகையில், மின் பகிர்மான, விநியோக அமைப்புகளுக்கு போதிய முதலீடுகளும் வழங்கப்படும்.

இந்த அரசு பதவியேற்ற பிறகு 2,72,912-க்கும் மேற்பட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால், மின் விநியோகத் தரம் கணிசமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

விவசாயத்துக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் ரூ.19,872.77 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in