Published : 14 Aug 2021 03:18 AM
Last Updated : 14 Aug 2021 03:18 AM

தொலைநோக்குப் பார்வை கொண்ட பட்ஜெட்: அரசியல் கட்சித் தலைவர்கள், தொழில் அமைப்புகள், விவசாய சங்கங்கள் பாராட்டு

தமிழக பட்ஜெட் தொலைநோக்குப்பார்வையுடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக அரசியல் கட்சித் தலைவர்கள்,தொழில் அமைப்பினர், விவசாய சங்கத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தை தலைநிமிரவைக்கும் தொலைநோக்குத் திட்டங்கள் ஏராளமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களும் பயனடைவர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: தமிழக வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. பெட்ரோல் வரி குறைப்பு, மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக அதிகரிப்பது வரவேற்கத்தக்கது. பெரிய வரவேற்பும் இல்லாமல், குறைசொல்ல முடியாமலும் நடுநிலை பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

மதிமுக பொதுச் செயலர் வைகோ: பொற்கால ஆட்சிக்கான திறவுகோலாக பட்ஜெட் அமைந்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மின்னணு கொள்முதல், அனைத்து துறைகளும் கணினிமயம் உள்ளிட்ட அறிப்புகள் மூலம், ஊழலற்ற, நேர்மையான நிர்வாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிசெய்திருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்ல, முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோடவேண்டுமென்ற தொலைநோக்குப்பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறது இந்த பட்ஜெட்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன்: கடும்நிதி நெருக்கடிக்கு மத்தியில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தமிழக பட்ஜெட்டை வரவேற்கிறோம். நஷ்டத்தில் உள்ள தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களை முழுமையாக சீரமைக்க முயற்சிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை நடப்பு நிதியாண்டில் இருந்தே வழங்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் வகையிலும் பட்ஜெட் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன்: தமிழ்நாட்டின் வளர்ச்சி, ஏழைகளின் நலன், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக மக்களுக்கு ஏமாற்றம்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்: திமுக தேர்தலின்போது அளித்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு,இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. எங்கள் கூட்டணியில் உள்ள பாமக பட்ஜெட்டை வரவேற்று இருக்கலாம். அவர்களது கொள்கைகளில் எங்களால் தலையிட முடியாது.

சென்னை மாவட்ட குறு நிறுவனங்கள் கூட்டமைப்புத் தலைவர் டி.வி.ஹரிஹரன்: திறன் மேம்பாட்டுத்தொழில் பயிற்சி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மானியம், தொழில் பூங்காக்கள், தொழில் துறை நிதி கட்டமைப்பை மேம்படுத்த குழு அமைப்பு ஆகிய அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத் (ஃபியோ) தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல்: அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு, விவசாய உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஆதரவு ஆகியவை மூலம் பின்தங்கிய பகுதிகள் மேம்படும். தொழில் துறை வளர்ச்சியில் தமிழகம் முதல் 3 இடங்களுக்குள் வரும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன்: சமூகநலன், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கு இந்த பட்ஜெட் உதவும். மொத்தத்தில் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.

தமிழக வேளாண் உணவு, தொழில் வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.ரத்தினவேல்: தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் பட்ஜெட் இது. ஜிஎஸ்டி வரி தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க குழு அமைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத் தலைவர் டார்லிங் வெங்கடசுப்பு: பாலாறு நதி நீர் இணைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததால், 7 மாவட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். டீசல் விலையையும் குறைத்திருக்கலாம். குடிசை இல்லாத தமிழகம், சுகாதாரமான குடிநீர் விநியோகம் உள்ளிட்டவை வரவேற்புக்குரியவை.

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளைத் தலைவர் சி.பாலசுப்ரமணியம்: கோவையில் மெட்ரோ ரயில், ரூ.225 கோடியில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா, கோவை பெருநகர வளர்ச்சிக் குழும உருவாக்கம் உள்ளிட்டவை வரவேற்கத்தக்கவை.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன்: நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு ரூ.6,607 கோடி ஒதுக்கீடு, மேட்டூர்,வைகை அணைகளின் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை, இலவச மின்சாரமானியத்துக்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கத்தக்கவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x