

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ்,எம்.ஆர்.சுவாமிநாதன். ‘ஹெலிகாப்டர் சகோதரர்கள்’ என அழைக்கப்பட்ட இவர்கள் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இவர்களின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தபல கோடி ரூபாய் பணத்தை திருப்பி வழங்காமல் மோசடி செய்துவிட்டதாக பலபேர் தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், மாவட்ட குற்றப்பிரிவுபோலீஸார் வழக்குப் பதிவு செய்து, எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சுவாமிநாதன் உட்பட 7 பேரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்ட எம்.ஆர்.கணேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகிய இருவரையும் போலீஸார் கடந்த9-ம் தேதி முதல் 4 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரித்தனர். 4 நாட்கள் நிறைவடைந்ததை அடுத்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவருக்கும் நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, மீண்டும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களைநீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு டிஐஜி பிரவேஷ்குமார் கூறியதாவது:
கும்பகோணம் நிதிநிறுவனத்தில் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்ட எம்.ஆர்.கணேஷ்,எம்.ஆர்.சுவாமிநாதன் ஆகியோருக்கு போலீஸ் காவல் முடிவடைந்ததால், அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம். இவர்கள் மீது ரூ.30 கோடிமோசடி செய்ததாக 35 பேர் அளித்தபுகார்களின் அடிப்படையில், 35வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து, அவர்கள் மீது மோசடி புகார்கள் வந்துகொண்டுள்ளன. தேவைப்பட்டால், இருவரையும் மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்போம் என்றார்.