

ஒக்கியம்- துரைப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்காக துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இன்று அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்தது. இதில், அடையாறு, கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாய் கரைகளில் உள்ள குடிசைப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தனர். இவர்களுக்கு நிரந்தர தீர்வளிக்கும் வகையில், ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளில் 10 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
கடந்த 4-ம் தேதி வரை 3 ஆயிரத்து 590 குடும்பங்கள் இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். இக்குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாமை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து 6-ம் தேதி (இன்று), வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் துரைப்பாக்கம், டி.பி.ஜெயின் கல்லூரியில் காலை 8:30 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதில் சுமார் 150 நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. மேலும், திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் 25-க்கும் மேற்பட்ட தொழிற் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் இம்முகாமில் பங்கேற்கின்றன. அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு பெற விரும்புவோர், அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க மறு குடியமர்வு திட்டப்பகுதிகளில் இருந்து துரைப்பாக்கத்துக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.