

மிசா அவசரச் சட்ட காலத்தில் அனுபவித்த சிறை வாசம் தனக்கு மிகப்பெரிய அரசியல் பாடம் கற்றுத் தந்தாக கூறுகிறார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.
இன்றுடன் (திங்கள்கிழமை 01.02.2016) ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பலரும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனை முன்னிட்டு 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், "அது நெருக்கடி நிலை அமலில் இருந்த காலம். அப்போது நான் மதுராந்தகத்தில் திமுக இளைஞரணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தேன். அந்த வேளையில் என்னைத் தேடி போலீஸார் என் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
மிசா சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய வந்திருப்பதாக கூறியுள்ளனர். என் தந்தையோ நான் மதுராந்தகம் சென்றிருப்பதாகவும் சென்னை திரும்பியவுடன் ஒப்படைப்பதாகவும் வாக்குறுதி அளிதார். அதன்படி நான் சென்னை திரும்பியதும் கைது செய்யப்பட்டேன். பிப்ரவரி 1-ம் தேதி சென்னை காவல் ஆணையரிடம் என்னை என் தந்தை ஒப்படைத்தார்.
மாநிலத்தில் உள்ள பிற தொண்டர்களுக்கு நான் கைதானது தெரியவில்லை. முரசொலி பத்திரிகையிலும் இது குறித்து வெளிப்படையாக தெரிவிக்க முடியாத சூழல் இருந்தது.
இதனையடுத்து, என்னுடன் கைதான திமுக தலைவர்கள் பெயர்களை பட்டியலிட்ட கருணாநிதி, இவர்கள் அனைவரும் அண்ணா நினைவு தினத்தன்று தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் நிலையில் இல்லை என முரசொலியில் செய்தி வெளியிட்டார். கட்சித் தொண்டர்கள் என் கைது செய்தி மறைமுகாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அதன்பின்னர் நான் அனுபவித்த சிறை வாழ்க்கை எனக்கு மிகப் பெரிய அரசியல் பாடங்களை கற்றுக் கொடுத்தது. ஆனால், அதற்காக நான் மிகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. ஆம், சிறையில் நான் இரக்கமின்றி அடித்து துன்புறுத்தப்பட்டேன். என்னை காப்பதற்காக முயற்சித்த மேயர் சிட்டிபாபு படுகாயமடைந்தார். அப்போது நான் வாங்கிய அடியால் ஏற்பட்டதே எனது வலது கரத்தில் இருக்கும் இந்த தழும்பு. பின்நாளில் அதுவே பல்வேறு இடங்களிலும் எனது நிரந்தர அடையாளமாயிற்று" என்றார்.
இதேபோல் திருநாவுக்கரசர் தனது சிறை அனுபவம் பற்றி கூறும்போது, "நெருக்கடி நிலையும், அதன் தொடர்ச்சியாக திமுக ஆட்சி கலைக்கப்பட்டதும் கழகத்தை கட்டிப்போடும் முயற்சியாக இருந்தது. அதேவேளையில், அடக்குமுறையையும் மீறி கட்சியின் பக்கபலமாக யார் யாரெல்லாம் நிற்பார்கள் என்பதையும் அடையாளம் காட்டியது" என்றார்.
தேசிய அங்கீகாரம்:
"ஒரு புறம் நெருக்கடி நிலையில் இறுக்கம் அதிகரிக்க மறுபுறம் கருணாநிதி தேசியத் தலைவராக உருவெடுத்துக் கொண்டிருந்தார். கட்சி சிதைந்து போகாமல் கட்டுக்கோப்புடன் இருப்பதை அவர் உறுதி செய்தார். சிலர் கருணாநிதி தலைவர் பதிவியிலிருந்து விலகுமாறு ஆலோசனை வழங்கினர். கட்சியின் பெயரை மாற்றலாம் என நெடுஞ்செழியர் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து கூறினர்.
ஆனால், எல்லா ஆலோசனைகளையும் புறக்கணித்த கருணாநிதி தான் மட்டுமே தனித்து நின்று அனைத்து சவால்களையும் எதிர்கொண்டார். தற்போது திமுக இளைஞரணி தலைமை அலுவலகமாக உள்ள அன்பகத்தில் இருந்து கொண்டே கருணாநிதி அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் கவனித்து வந்தார்" என திருநாவுக்கரசர் கூறினார்.
தமிழில்:பாரதி ஆனந்த்