தேர்தல் வாக்குறுதி; திமுகவுக்கு அம்னீஷியா: தமிழக பட்ஜெட் பற்றி அண்ணாமலை சாடல்

தேர்தல் வாக்குறுதி; திமுகவுக்கு அம்னீஷியா: தமிழக பட்ஜெட் பற்றி அண்ணாமலை சாடல்
Updated on
1 min read

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுகவுக்குக் குறுகிய கால அம்னீஷியா ஏற்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கடந்த பிப்.23-ம் தேதி முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தற்போது திமுக ஆட்சி அமைத்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2021-22ஆம் நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முதல்முறையாக இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுகவுக்கு குறுகிய கால அம்னீஷியா ஏற்பட்டுள்ளதாகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''திமுக அரசு தனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில் எதிர்பார்த்ததைப் போலவே தமிழகத்துக்கு எந்த தொலைநோக்குத் திட்டமும் இல்லை. வழக்கம்போல நம்முடைய மத்திய அரசின் திட்டங்களுக்குப் புதிய பெயர் சூட்டப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல சரியாக நிர்வகிக்கவில்லை என்று முந்தைய அரசும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. அதிகாரத்துக்கு வருவதற்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் குறுகிய காலத்திலேயே 'அம்னீஷியா' (ஞாபக மறதி) ஏற்பட்டுள்ளது'' என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் நாளை (14-ம் தேதி) தாக்கல் செய்யப்படுகிறது. இரண்டு பட்ஜெட் மீதான விவாதம் ஆக.16 தொடங்கி 19-ம் தேதி முடிவடைகிறது. அதன்பின், ஆக.23-ம் தேதி முதல் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in