

தனியார் மருத்துவமனைகளில் கோவிட் தொற்று பாதிப்பால் அனுமதிக்கப்படும் நோயாளிகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள தனியார் மருத்துவமனைகளால் அறிவுறுத்தப்படும் நபர்கள் குறித்த விவரங்களை தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையிலும், கோவிட் மூன்றாம் அலையை தடுக்கும் வகையிலும் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒருபகுதியாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் விவரங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நோயாளிகளின் விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தும் வகையில், தனியார் மருத்துவமனைகளுடனான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இன்று ரிப்பன் கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ககன்தீப் சிங் பேடி தெரிவித்ததாவது:
"தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஒரு நபர் மருத்துவரைக் கொண்டு இயங்கும் கிளினிக்குகள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகளுடன் வரும் நபர்கள் குறித்த தகவல்களை தெரியப்படுத்துதல்
தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கோவிட் தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஒரு சில வாரங்களாக தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளிலிருந்து தொற்று அறிகுறியுள்ள நபர்களின் விவரங்கள் சரிவர தெரியப்படுத்தப்படவில்லை. கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் தங்களிடம் வரும் நோயாளிகளின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை மாநகராட்சியின் gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும்.
கோவிட் தொற்று பாதித்த நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலிருந்து 12 நாட்களுக்கு முன்னதாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தல்
ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கோவிட் தொற்று பாதித்த நபர்களில் அறிகுறி இல்லாத நபர்கள் இரண்டு மூன்று நாட்களில் அல்லது 12 நாட்களுக்கு முன்னதாக டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். அவ்வாறு டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லும் போது குடும்பத்தில் உள்ள பிற நபர்களுக்கு தொற்று பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது.
எனவே, 12 நாட்களுக்கு முன்னதாக டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்கள் குறித்த விவரங்களை gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரியப்படுத்துவதன் மூலம் தொற்று பாதித்த நபர்கள் மாநகராட்சியின் கீழ்க்கண்ட கோவிட் பாதுகாப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்.
மேலும், இத்தகைய நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் மாநகராட்சியின் மண்டல சுகாதார நல அலுவலர்கள், பூச்சியியல் தடுப்பு வல்லுநர்கள் வாயிலாக தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.
ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை முறையாக தெரிவித்தல்
தனியார் ஆய்வகங்களின் மேற்கொள்ளப்படும் ஆர்.டி-பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை தனியருக்கு நேரடியாக தெரிவிக்காமல் மாநகராட்சியின் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என ஏற்கெனவே அனைத்து தனியார் ஆய்வகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு மாநகராட்சியின் மூலம் முடிவுகள் தெரிவிப்பதன் மூலம் தொற்று பாதித்த நபரின் பதற்றத்தை குறைத்து முதற்கட்ட பரிசோதனை மையங்களுக்கு (Screening Centre) அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவும், அவர்களின் மூலம் பிறருக்கு தொற்று பரவுதலை கட்டுப்படுத்தவும் ஏதுவாக இருக்கும்.
தனியார் மருத்துவமனைகளில் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் நலன் கருதி அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவமனை வளாகங்கள் முழுவதுமாக அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். இதன்மூலம் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற வரும் நபர்களுக்கு மருத்துவமனைகளிலிருந்து கோவிட் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், தனியார் மருத்துவமனைகளின் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளும் நோயாளிகளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தனிமைப்படுத்திக் கொள்வதற்கான வசதிகள் உள்ளனவா என்பதை தீர விசாரிக்காமல், தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படுவதாகவும் தகவல்கள் தெரியவந்துள்ளது. எனவே, தனியார் மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களின் மூலமாக வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும் நபர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு 044-2538 4520 என்ற தொலைபேசி எண்ணிலும் gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.