Published : 13 Aug 2021 04:44 PM
Last Updated : 13 Aug 2021 04:44 PM

சித்த மருத்துவத்துக்குத் தனி பல்கலைக்கழகம்; முதல்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு

மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல் சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.13) தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள்:

* தமிழ்நாடு முதல்வரால் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் மகத்தான முன்மாதிரித் திட்டம் உருவாக்கப்பட்டு மொத்தம் 257.16 கோடி ரூபாய் செலவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

* முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைவரின் பாராட்டையும் பெற்ற 108 இலவச ஆம்புலன்ஸ் சேவைகள் திட்டத்தை 15.09.2008 அன்று தொடங்கி வைத்தார். இலவச ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையானது 1,303 ஆக உயர்த்தப்பட்டு, சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்படும்.

* 23-07-2009 அன்று தொடங்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவ நிறுவனங்களிலுள்ள சிறந்த மருத்துவ வசதிகள் ஏழை மக்களுக்குக் கிடைப்பதை உறுதிபடுத்தும் வண்ணம், கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் நோய்களும், சிகிச்சை முறைகளும் இந்த அரசால் விரிவுப்படுத்தப்பட்டன.

* முன்னாள் முதல்வர் கருணாநிதி, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை அமைத்திடத் திட்டமிட்டார். அதற்கென, உரிய நிலமும் கண்டறியப்பட்டது. அதற்குப் பின், இத்திட்டத்தைச் செயல்படுத்தவில்லை. மற்ற உள்நாட்டு மருத்துவ முறைகளைப் போல் சித்தாவிற்கும் உரிய அங்கீகாரம் அளிக்கும் விதமாக, தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகத்தை இந்த அரசு அமைத்திடும். இதற்கென, முதல்கட்ட நிதியுதவியாக 2 கோடி ரூபாய் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x