

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான வேலைநாட்கள் மற்றும் ஊதியத்தை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக. 13) காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார்.
அதன் சிறப்பம்சம்:
* 2020-21 காலக்கட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட
4,67,567 பணிகளில் 2,65,016 பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு சட்டத்தை அமல்படுத்துவததில் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜான் டிரேஸ் முக்கிய பங்கை வகித்தார்.
இந்த அரசு இத்திட்டத்துக்கு கூடுதல் உந்துதலை அளிப்பதுடன், மொத்த ஊதிய செலவு 6,825 கோடி ரூபாயும், பொருட்செலவாக 3,200 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து, நடப்பாண்டில் 25 கோடி மனித உழைப்பு நாட்கள் அளவிலான வேலைவாய்ப்பை உறுதி செய்யும். மேலும், இத்திட்டத்தில் மனித உழைப்பு நாட்களை 100-லிருந்து 150 ஆக உயர்த்தவும், ஊதியத்தினை நாளொன்றுக்கு 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்த்தவும் இந்த அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்.