

மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு முட்டைகள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை சீரமைக்கப்படுவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.13) தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள பள்ளிக் கல்வி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள்:
* திருநங்கைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. 1,071 கைவிடப்பட்ட திருநங்கையர் பயன்பெறும் வகையில், மூன்றாம் பாலினத்தவருக்கான ஓய்வூதியத் திட்டத்துக்காக 1.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்த குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இந்த அரசு சிறப்பு முயற்சிகளை எடுத்துள்ளது.
* இதுவரை 5,963 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 95.96 கோடி ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
* அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்துவதற்காக சிறப்பு ஒதுக்கீடாக 48.48 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு, கல்வி சார்ந்த பொருட்களை வழங்குவதற்கு 23.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மதிய உணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு முட்டைகள் மற்றும் இதர பொருட்கள் கொள்முதல் செய்யும் முறை சீரமைக்கப்படுவதன் மூலம் செலவினங்கள் குறைக்கப்படும்.