கற்றல் இழப்புகளைக் குறைப்பதே உடனடி முன்னுரிமை: பள்ளிக்கு வெளியே குறைதீர் கற்றல் திட்டம்

கற்றல் இழப்புகளைக் குறைப்பதே உடனடி முன்னுரிமை: பள்ளிக்கு வெளியே குறைதீர் கற்றல் திட்டம்
Updated on
1 min read

கரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும் என்றும் கற்றலில் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்வதற்காக, பள்ளி நேரங்களைத் தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஆக.13) தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள பள்ளிக் கல்வி வளர்ச்சி தொடர்பான அறிவிப்புகள்:

* பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் விதமாக இந்த வரவு- செலவுத் திட்டத்தில் மொத்தமாக 32,599.54 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

* தேசிய அடைவு ஆய்வு கணக்கெடுப்பின்படி, கற்றல் விளைவுகளின் அடிப்படையில் முதல் மூன்று மாநிலங்களுக்குள் தமிழ்நாடு கொண்டுவரப்படுவதை அரசு உறுதி செய்யும்.

* அனைத்து ஆசிரியர்களுக்கும் தொழில்நுட்ப வசதியுடன் கண்காணிக்கக்கூடிய மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலான பயிற்சி வழங்க ஏதுவாக 413 கல்வி ஒன்றியங்களுக்கும் தலா 40 தொடுதிரை கையடக்கக் கணினிகள் (Tablet) ரூ.13.22 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

* 2025ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும், அடிப்படைக் கணக்குகளைச் செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக, அடிப்படைக் கல்வியறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’, ரூ.66.70 கோடி மதிப்பீட்டில் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.

* அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித் திறன்களை இளம் வயதிலேயே பெறுவதை உறுதிசெய்ய 1,784 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 114.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், 865 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 20.76 கோடி ரூபாயில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்.

* அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி, கவின்திறன் மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன், மாதிரிப் பள்ளிகள் அமைத்திட சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

* கரோனா பெருந்தொற்றின் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளைக் குறைப்பதே இந்த அரசின் உடனடி முன்னுரிமையாக இருக்கும். பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு விரைவாகச் செயல்படும் வகையில் அனைத்து ஆசிரியர்களுக்கும் தேவையான கரோனா தொடர்பாகக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கற்றலில் ஏற்பட்ட இழப்புகளைச் சரிசெய்வதற்காக, பள்ளி நேரங்களைத் தவிர பள்ளி வளாகங்களுக்கு வெளியே குறைதீர் கற்றல் வழங்குவதற்கான விரிவான திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in