

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வழக்குப் போட்டு அதிமுக தொண்டர்களின் வேகத்திற்குத் தடை போட முடியும் என்று பகல் கனவு காண வேண்டாம், பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
''பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் கூச்சலிட்டு, பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதைத் தொடர்ந்து அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எங்கள் அரசை ஊதாரித்தனமான அரசு என்று நிதியமைச்சர் விமர்சித்துள்ளார். அவரைக் கண்டிக்கிறோம். அதேபோல அதிமுக முன்னாள் அமைச்சர்கள், தகவல் தொழில்நுட்பத் துறையினர், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் மீதும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் வழக்குப் போட்டு அதிமுக தொண்டர்களின் வேகத்திற்குத் தடை போட முடியும் என்று பகல் கனவு காண வேண்டாம். பொய் வழக்குகளுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம்.
ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் அரிசி அட்டையின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. 2010ஆம் ஆண்டில் திமுக அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்குத்தான் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றை வழங்கியது. அதேபோலத்தான் அதிமுக அரசும் அதே நடைமுறையை பின்பற்றியது. அப்படி எனில் பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக செய்ததும் தவறா? ஒருவேளை தவறு என்றால், நீங்கள் இப்போது கரோனா நிவாரண நிதி கொடுத்த போது விரும்பிய மாற்றத்தைச் செய்திருக்கலாமே?
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு, ஆட்சிப் பொறுப்பேற்ற உடனே நான் போடும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முதல்வர் ஸ்டாலின் கூறி இருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகியும் நீட் தேர்வுக்கு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.
அதேபோல நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் வரை, மாணவர்கள் அனைவரும் தேர்வுக்குத் தயாராக வேண்டும் என்ற தெளிவான அறிவுரையும் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது அவர்களிடையே தீராத குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே நீட் தேர்வுக்குத் தீர்வு காணாத தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.''
இவ்வாறு ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.