நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை, ஏன்?- நிதியமைச்சர் தகவல்

நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இல்லை, ஏன்?- நிதியமைச்சர் தகவல்
Updated on
1 min read

நகைக்கடன் முறைகேடுகளைத் திருத்தி, தீர ஆராய்ந்து, பிறகு தள்ளுபடி திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுக ஆட்சி அமைத்த நிலையில், 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய பட்ஜெட் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

கூட்டுறவுக் கடன் தள்ளுபடி

''கூட்டுறவுக் கடன் சங்கங்களில் வழங்கப்பட்ட நகைக் கடன்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்களைத் தள்ளுபடி செய்வது இந்த அரசின் முன்னுரிமையாகும். முந்தைய அரசு, தேர்தலுக்கு முன்பாக பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது, இத்திட்டத்தின் மொத்தச் செலவு ரூ.12,110.74 கோடி என மதிப்பிடப்பட்டது. முந்தைய அரசால் இந்த அரசின் மீது சுமத்தப்பட்ட மிகப் பெரிய நிதிச்சுமையாக இது அமைந்தது. இதற்காக 4 ஆயிரத்து 803 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் செயல்பாட்டை ஆராய்ந்தபோது பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ள உண்மை தெரியவந்துள்ளது. சில மாவட்டங்களில் இந்தத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே சந்தேகத்திற்கு இடமான வகையில் அதிகமான அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் அடங்கலில் குறிப்பிட்டுள்ளதை விட அதிக அளவிலும் அடங்கலில் குறிப்பிடப்பட்டுள்ள பயிரைத் தவிர வேறு பயிருக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பயிருக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலாகவும் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. குறிப்பிட்ட சில இடங்களில் அடங்கலே இல்லாமல் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களைப் பொறுத்தவரை கூட்டுறவு சங்கங்களில் இருந்து அனுமதி இல்லாமலும் தொகையைப் பெறாமலும் சில சங்கங்களில் கடன்கள் வழங்கப்பட்டன. மேலும் சில சங்கங்களில் திருப்பிச் செலுத்தப்பட்ட பல்வேறு கடன்களின் தொகையைக் கொண்டு பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

நகைக் கடன்

விவசாய நகைக் கடன்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரம், தூய்மை ஆகியவை சரியாகக் கணக்கிடப்படவில்லை. எனவே இந்த கடன் தள்ளுபடியைத் தொடர்ந்து அனுமதிக்கும் பட்சத்தில் தவறு செய்பவர்கள் பலரும் பலனை பெறக் கூடிய வாய்ப்புகள் நிகழும். எனவே இந்த முறைகேடுகளைத் திருத்தி, தீர ஆராய்ந்து இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

இதுபோன்ற இதர நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும்போதும் இதே நிகழ்வு பொருந்தும் என்பதால் அதுகுறித்து உரிய விசாரணைக்குப் பிறகு, தள்ளுபடி குறித்து இந்த முடிவு எடுக்கப்படும். அப்போதுதான் தவறு செய்பவர்கள் தவிர்க்கப்பட்டு, உண்மையான பயனாளிகள் பலன் அடைவர்''.

இவ்வாறு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in