Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பூங்கா அமைகிறது: ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

ஆசியாவில் மிகப்பெரிய அளவி லான தொழிற்பூங்கா கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து விரைவில் அமைக்கப்படவுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் தமிழகதொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் கோவை கோயிண்டியா வளாகத்தில் நேற்றுநடைபெற்றது. தொழில் துறை செயலர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை செயலர் வி.அருண்ராய், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற னர்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம், கொடிசியா, தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம், இந்திய தொழில் வர்த்தக சபை, இந்திய தொழிலக கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டு கோவையின் தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையான அம்சங்கள் குறித்து பேசினர்.

பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொழில் துறையினரின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற ஆவன செய்யப்படும்.

கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டுவரையிலான திமுக ஆட்சியில் கோவையில் மிகப்பெரும் தொழிற் பூங்கா அமைக்க வேண்டும் என்பதற் காக முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரும் தொழிற்பூங்கா அமைக்க திட்ட மிடப்பட்டு, கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் தெக்கலூர் பகுதிகளை ஒருங்கிணைத்து 316 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அதற்கு பிறகு வந்தஅதிமுக அரசு, அதனை கண்டுகொள்ளாமல் விட்டதால் அந்த திட்டம் முடங்கிய நிலையில் உள்ளது. தற்போது அந்த திட்டம் மீண்டும் வரவுள்ளது. நிலம் கையகப்படுத் தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து,அங்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி விரைவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த தொழிற்பூங்கா அமைக் கப்பட்டால் ஏராளமானோருக்கு வேலை கிடைக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு

முன்னதாக, ஆர்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுவரும் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறும்போது, ‘‘தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, அனைத்து பிரிவு மக்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் மெக்ரிக்கர் சாலையில் கட்டப்பட்டுவரும் குடியிருப்பில் ஒரு வீட்டின் மதிப்பு ரூ.9.38 லட்சம் ஆகும். செல்வபுரத்தில் கட்டப்பட்டுவரும் வீட்டின் மதிப்பு ரூ.8.80 லட்சம் ஆகும்.

மத்திய, மாநில அரசுகளின் மானியம் போக, மீதம் உள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். குலுக்கல் முறையில் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்’’ என்றார்.

‘கோவையில் பவுண்டரி தொழில்நுட்ப மையம்’

அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த குறுகிய நாட்களில் சுமார் ரூ.17 ஆயிரம் கோடி அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. சுமார் 56 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்று காலத்தில் கோவை போன்ற தொழில் நகரங்களில் உள்ள உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் தங்களது ஆர்டர்களை குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்க ஏதுவாக தொழில் நிறுவனங்கள் தடையின்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கோவை பவுண்டரி தொழிலின் கேந்திரமாக இருப்பதால், அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும். கோவையில் தொழில் வளர்ச்சி பெறவும், புதிய தொழில்கள் வரவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும். கோவை விமானநிலைய விரிவாக்க பணிகளையும் அரசு முனைப்புடன் செய்யும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x