

தமிழகம் முழுவதும் வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைவுற்றோரை குறிவைத்து ரூ.2 கோடியே 50 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். செவித்திறன் பாதித்தவர். ‘செவித்திறன் பாதித்தோர் விளையாட்டுக் கழகம்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.
இவர் தமிழகம் முழுவதும் உள்ள செவித்திறன் பாதித்த மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளைத் தொடர்பு கொண்டு, ‘இந்தியா இன்வெஸ்ட்மென்ட் கான்பரன்ஸ் ஆப் தி டெஃப்’ என்ற நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தினால், 45 நாட்களில் இரட்டிப்பாக்கி திருப்பிக் கொடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார்.
இதை நம்பி தமிழகம் முழுவதும் இருந்து செவித்திறன் பாதித்த மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் பணம் கொடுத்துள்ளனர். இவ்வாறாக சுமார் ரூ.2 கோடியே 50 லட்சம் வரை வசூல் செய்துள்ளனர்.
பணத்தை பெற்றுக் கொண்டு பின்னர் நீண்ட நாட்கள் கடந்த பின்னரும் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், வாய் பேச முடியாத, செவித்திறன் பாதித்தவர்கள் என்பதால் ஏமாந்த விதத்தை காவல் நிலையத்தில் தெளிவாக எடுத்துக் கூற முடியவில்லை.
இதனால் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மேலும், அதிமுகவை சேர்ந்த பெண் அரசியல்வாதி ஒருவரும் பாதிக்கப்பட்டவர்களை மிரட்டியதால் பலர் புகார் கொடுக்கவே வரவில்லை.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பலர் ஒன்று சேர்ந்து, இந்த மோசடி சம்பவம் குறித்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரின்பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.