புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு: தமிழிசையிடம் பிரதமர் மோடி உறுதி

புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு: தமிழிசையிடம் பிரதமர் மோடி உறுதி
Updated on
1 min read

புதுச்சேரி, தெலங்கானா வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாக ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானா மாநில ஆளுநரான தமிழிசை, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக வகிக்கிறார். தற்போது தெலங்கானா சென்று விட்டு அங்கிருந்து டெல்லி சென்றுள்ள அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்தார். அதைத்தொடர்ந்து இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பு தொடர்பா ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"பிரதமருடன் ஆளுநர் தமிழிசை சந்திப்பின்போது, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கான பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

மேலும், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநில மக்களின் நலன் குறித்து அக்கறையுடன் விசாரித்தார். கரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களுக்கும் செய்த உதவிகளுக்கும், பிற்படுத்தப்பட்டோர் சட்ட முன் வரைவிற்கும் துணைநிலை ஆளுநர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், பிரதமர் அளித்த ஊக்கத்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in