சமீஹா பர்வீன்: கோப்புப்படம்
சமீஹா பர்வீன்: கோப்புப்படம்

பெண் என்பதால் தடகள வீராங்கனைக்கு வாய்ப்பு மறுக்கப்படுபதை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம்

Published on

சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றவர்களில் ஒருவர் மட்டுமே பெண் என்பதால், சமீஹா பர்வீனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுபதை ஏற்க முடியாது என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சமீஹா பர்வீன். செவித்திறன் குறைபாடு உடைய இவர், தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில், செவித்திறன் குறைபாடு உள்ள விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச அளவில் நடத்தப்படும் தடகள விளையாட்டு போட்டிக்கான தகுதிப்போட்டிகள் டெல்லியில் நடத்தப்பட்டதில், இந்திய அளவில் கலந்து கொண்ட 12 பேரில், தகுதி சுற்றில் தகுதி பெற்றும் பெண் என்பதால், தன்னை போலந்து நாட்டுக்கு அழைத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் 11 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் போன்ற 13 பதக்கங்களை வென்ற தகுதியுடைய தனக்கு, மத்திய அரசு நிதியுதவி செய்ய முடியாத சூழலில் இருப்பதால், தன் நிலைமை கருதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், விஜய் வசந்த் ஆகியோர், போலந்துக்கு அனுப்ப பொருளுதவி செய்ய தயாராக இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு இன்று (ஆக. 12) விசாரணைக்கு வந்தபோது, சமீஹா பர்வின் தரப்பில், தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற 5 வீரர்களில் தான் மட்டுமே பெண் என்பதால், போலந்து நாட்டில் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

பின்னர், நீதிபதி, தகுதி பெற்றும் பெண் என்பதால் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் அனுமதி மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என தெரிவித்து, சமீஹா பர்வீன் தடகள போட்டிகளில் இதுவரை பெற்றுள்ள பதக்க விவரங்களை இன்று மாலைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். நாளைக்குள் (ஆகஸ்ட் 13) இந்த வழக்கு தொடர்பாக மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பதிலளிக்காவிட்டால், நேரடியாக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, வழக்கை தள்ளிவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in