

விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பேரறிவாளனுக்கு தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு 60 நாட்கள் பரோலும், இதனையடுத்து, 2019-ம் ஆண்டு பேரறிவளானின் தந்தை குயில்தாசனின் உடல்நிலை மற்றும் அவரது தங்கையின் மகள் திருமணத்துக்காக தமிழக அரசு 30 நாட்களும், மேலும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் 90 நாட்களுக்கு பரோல் அனுமதி கோரி, இருந்த நிலையில் 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தமிழக அரசுக்கு பேரறிவாளன் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை அளிக்க மனு அளித்து இருந்தார். இதனையடுத்து, தமிழக அரசு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், பேரறிவாளனின் பரோல் காலத்தை மேலும் நீடிக்க வேண்டும் என, அவரது தாயார் அற்புதம் அம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடந்த 27-ம் தேதி அறிவித்தது.
சிறுநீரக கோளாறு காரணமாக, கடந்த நவம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர் தொடர் பரிசோதனைகளுக்கு தன்னை உட்படுத்தி வருகிறார்.
அதன்படி, மருத்துவப் பரிசோதனைக்காக பேரறிவாளன் இன்று (ஆக. 12) தனது இல்லத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் தனது தாயார் அற்புதம் அம்மாளுடன் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு வந்துள்ள அவர், மருத்துவர் தியாகராஜனிடம் உடல் பரிசோதனை செய்துகொண்டார். மேலும், அவர் 2 நாட்கள் தங்கி பரிசோதனை செய்து கொண்டு வீடு திரும்புவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரது வருகையையொட்டி, விழுப்புரம் - புதுச்சேரி சாலை மற்றும் தனியார் மருத்துவமனையில் ஏராளமான போலீஸார் பாதுக்காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.