

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வில் இன்று சங்ககாலக் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொற்பனைக்கோட்டையில் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் கோட்டை சுவர் உள்ளது. இதன் அருகே அகழியும் உள்ளது. சுவரின் மீது கொத்தளங்கள் இருந்ததற்கான கட்டுமானங்களும் காணப்படுகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் சங்க காலக் கோட்டை கொண்டுள்ள ஒரே இடமான பொற்பனைக்கோட்டையைப் பற்றி, குடவாயில் பாலசுப்பிரமணியன், கரு.ராஜேந்திரன், ஆ.மணிகண்டன் உள்ளிட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
அதனடிப்படையில், இப்பகுதியை அகழாய்வு செய்ய வேண்டும் எனப் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.
இதை, பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இ.இனியன் தலைமையிலான குழுவினர், இன்று (ஆக. 12) 9-வது நாளாக அகழாய்வு செய்து வருகின்றனர். 8 மீட்டர் நீள, அகலத்தில் 5 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இதில், தென்மேற்கு திசையில் உள்ள ஒரு குழியில் சுமார் இரண்டரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, இ.இனியன் கூறியதாவது:
"இப்பகுதியானது சங்க காலத்தைச் சேர்ந்தது என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உறுதி செய்துள்ளன. தற்போதைய ஆய்வின்போது சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை 32 சென்டி மீட்டர் நீளம், 23 சென்டி மீட்டர் அகலம் கொண்ட சுடு செங்கல்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.
இதன் உள்ளளவு சுமார் அரை அடியைக் கொண்டுள்ளதாக இருக்கிறது. இந்தக் கால்வாய் சுமார் 2 அடி நீளத்துக்குத் தெரிகிறது. தொடர் அகழாய்வுக்குப் பிறகுதான் முழுமையாகக் கால்வாய் கட்டமைப்பு தெரியவரும். சங்க காலத்தில் மக்கள் பயன்படுத்திய தண்ணீர் வெளியேற்றுவதற்கோ, வெளியில் இருந்து தண்ணீர் உள்ளே வருவதற்கோ இந்தக் கால்வாயைப் பயன்படுத்தி இருக்கலாம் எனத் தெரியவருகிறது.
ஏற்கெனவே, நவீன தொழில்நுட்பம் மூலம் மேலாய்வு செய்யப்பட்டபோது இப்பகுதியில் ஒரு கட்டுமானம் இருப்பதற்கான அறிகுறி இருப்பதாக ஆய்வு முடிவில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், தற்போது இந்தக் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது".
இவ்வாறு இனியன் தெரிவித்தார்.
இத்தகைய கண்டுபிடிப்பானது அனைத்துத் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விடத்தைப் பார்வையிடுவதற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.