

குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசின் விருதுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2018-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று, குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குற்ற வழக்குகள் சம்பந்தமான விசாரணைகளில் தொழில்முறைத் தன்மையை ஊக்குவிக்கவும், சிறப்பாக விசாரணை நடத்துபவர்களை ஊக்குவிக்கவும், இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. காவல்துறை மட்டுமின்றி, சிபிஐ, என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 6 காவல் அதிகாரிகளுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதன்படி, இந்த ஆண்டு நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு இந்த விருதுகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் இன்று (ஆக.12) அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிபிசிஐடி காவல் ஆய்வாளர் (நாகப்பட்டினம்) சரவணன், அனைத்து மகளிர் காவல் நிலையம் (திருவண்ணாமலை) காவல் ஆய்வாளர் அன்பரசி, புதுச்சத்திரம் காவல் நிலையம் (கடலூர்) காவல் ஆய்வாளர் கவிதா, வெங்கல் காவல் நிலையம் (திருவள்ளூர்) காவல் ஆய்வாளர் ஜெயவேல், திருப்போரூர் காவல் நிலையம் (செங்கல்பட்டு) காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, சென்னை பெருநகர காவல்துறை உளவுப்பிரிவு காவல் ஆய்வாளர் மணிவண்ணன், குரோம்பேட்டை காவல் நிலையம் (சென்னை) காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன், நாகர்கோவில் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் கண்மணி ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.