

பேருந்துக் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இன்று (ஆக.12) சென்னை, சைதாப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் புதிய வழித்தடங்களுக்கான 23 பேருந்துகளை மேற்கு சைதாப்பேட்டையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து, அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம், போக்குவரத்துத் துறை நஷ்டத்தில் இயங்குவதால், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுமா என, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளித்ததாவது:
"பேருந்துக் கட்டண உயர்வு இப்போதைக்கு இல்லை. நிதிச்சுமை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மக்களின் சேவைக்காகச் செயல்படுவோம். இந்த ஆட்சியில் போக்குவரத்துத் துறை புதிய பொலிவுடன் இனி செயல்படும்.
பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்துக்குக் கூடுதலாக ரூ.150 கோடி ஒதுக்க வேண்டியுள்ளது.
அம்மா குடிநீர் திட்டம் குறித்து கும்மிடிப்பூண்டியில் ஆய்வு செய்தோம். இத்திட்டத்தால் தங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அங்குள்ள பொதுமக்கள் தெரிவித்தனர். இத்திட்டம் ஆய்வில் இருக்கிறது. முதல்வரிடமும் தெரிவித்திருக்கிறோம். ஆய்வறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் விரைவில் கட்டி முடிக்கப்படும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு புதிய பேருந்துகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.