

கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் நேற்று கூறியதாவது:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிமற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 12-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
13, 14-ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்களில் ஓரிருஇடங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
11-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் கோலியனூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் தலா 8 செமீ,விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 6 செமீ மழை பதிவாகியுள்ளது.
தெற்கு வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடலோர பகுதிகளில் 15-ம் தேதி வரையும், 14, 15-ம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளை ஒட்டிய வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 60 கிமீவேகத்தில் சூறாவளிக் காற்றுவீசும். இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.