ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் இன்று ஏவப்படுகிறது: இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் தொடக்கம்

ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் இன்று ஏவப்படுகிறது: இறுதிகட்ட பணிகளுக்கான கவுன்ட்டவுன் தொடக்கம்
Updated on
1 min read

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-03 செயற்கைக்கோள், ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் இன்று (ஆக.12) காலை ஏவப்படுகிறது.

புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோளை இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோதிட்டமிட்டது.

காலை 5.43 மணிக்கு...

அதன்படி இஓஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-10ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று (ஆக.12) காலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவுதலுக்கான 26மணி நேர கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 3.43 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இஓஎஸ் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும். தட்பவெப்பநிலை மற்றும் வானிலை நிலவரங்களை நிகழ்நேர தன்மையில் தொடர்ந்து கண்காணிக்கும்.

இதுதவிர புயல் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள உதவும். அதனுடன் வனப்பகுதிகள், விவசாயம், நீர்நிலைகள், மேகத்திரள்கள் வெடிப்பு, இடியின் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ளவும் இது பயன்படும்.

கரோனா பரவலால் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக ஏவுதலைப் பார்வையிட அனுமதியில்லை. முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் நேரலை செய்யப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in