

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் பக்தர்கள்இன்றி தங்கத் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அன்று திருத்தேரோட்டம் நடைபெறும்.
கடந்த 3-ம் தேதி ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று தங்கத் தேரோட்டம் கோயில் வளாகத்துக்குள்ளேயே பக்தர்கள்இன்றி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கலந்துகொண்டு வடம்பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கிவைத்தார். மான்ராஜ் எம்எல்ஏ கோயில் தக்கார் ரவிச்சந்திரன் கலந்துகொண்டனர்.