

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் நிறைவேறும் காலம் விரைவில் வரும் என்பதால் இதற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் மக்கள், போராட்டத்தை கைவிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். 30 டிஎம்சி-க்கும் அதிகமான தண்ணீர் வீணாக கடலில் செல்வதை தடுத்து, அத்திக்கடவு என்னும் இடத்தில் கால்வாய்கள் அமைக்கும் இந்த திட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
திமுக கொண்டுவந்த கருமேனி யாறு - நம்பியாறு - தாமிரபரணி நதிநீர் இணைப்பு திட்டத்தைப் பற்றியே அக்கறை காட்டாதவர் கள், அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தைப் பற்றியா கவலைப்பட் டிருக்கப்போகிறார்கள். அந்த திட்டத்தை நிறைவேற்ற ஆட்சி யாளர்களுக்கு அக்கறை இருந் திருக்குமானால், கடந்த 5 ஆண்டு களாக இதைப் பற்றி கவலைப் படாமல் இருந்திருப்பார்களா?
இந்த ஆட்சி முடியும் நிலை வந்துவிட்டது. வரவிருக்கும் புதிய ஆட்சியில்தான் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். கடந்த 2011-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையிலேயே, அத்திக்கடவு - அவிநாசி வெள்ளக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப் படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அறிவித் தோம். ஆனால், அப்போது திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை. இந்த ஆண்டு தேர்தல் அறிக்கை யில் மீண்டும் அந்தத் திட்டத்தை சேர்ப்பதாக உள்ளோம். எனவே, இந்தத் திட்டத்துக்காக காலவரை யற்ற உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் அதை கைவிட்டு, திட்டம் நிறைவேறும் காலம் நெருங்கி வருவதால் இன்னும் சிலநாட்கள் பொறுமையாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.