செல்போனை தொடர்ந்து பார்ப்பதால் இளம்வயதில் குழந்தைகளுக்கு மாறுகண், கிட்டப்பார்வை: அகர்வால் கண் மருத்துவமனை எச்சரிக்கை
கரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்பதால் மாறுகண், ஒன்றரை கண், கிட்டப்பார்வை குறைபாடுகள் பல மடங்கு அதிகரித்துள்ளதாக அகர்வால் கண் மருத்துவமனை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
“குழந்தைகளின் கண் நலம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு” மாதத்தையொட்டி டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது முதுநிலை கண் மருத்துவர் மஞ்சுளா ஜெயக்குமார் கூறியதாவது:
மாறுகண், ஒன்றரை கண் பாதிப்புகள் 5 மடங்கு அதிகரித்திருப்பதும், கிட்டப்பார்வை குறைபாடு 100 சதவீதம் உயர்ந்துள்ளதும் கவலையை ஏற்படுத்துகின்றன. வெளியே அதிகம் செல்லாததால் குழந்தைகள் மீது சூரியஒளி படாததும், உடற்பயிற்சி இன்மையும், செல்போன், கணினி திரைகளை அதிகம் பார்ப்பதுமே இதற்கு காரணம். ஆரோக்கியமான, சமச்சீரான உணவு குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
அடிக்கடி இடைவெளி விட்டு ஆன்லைன் பாடம் கற்கும் குழந்தையை விட, தொடர்ந்து கணினி முன்பாக அமர்ந்திருக்கும் குழந்தைக்கு கிட்டப்பார்வை பாதிப்பு அதிகமாகிறது. ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க இயலாதபோது, செல்போனுக்கு பதிலாக கணினியை குழந்தைகள் பயன்படுத்த பெற்றோர்கள் ஆவன செய்ய வேண்டும். குழந்தைகளை 1 முதல் 2 மணி நேரம் வெளியே விளையாடச் செய்வதன் மூலம் சூரிய ஒளி படுவதால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சி ஊக்குவிக்கப்படும்.
கிட்டப்பார்வை குறைபாட்டை தடுக்க பல மருந்துகள் உள்ளன. ஆனால், மாறுகண் பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை ஒன்றே வழி என்றார்.
