

கரோனா தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்வதற்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கென 15 படுக்கை கொண்ட அதிநவீனசிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைப் பிரிவை சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். மருத்துவமனை டீன் ஜெயந்தி உடனிருந்தார். அப்போது ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தின் 34 மாவட்டங்களில் 100-க்கு கீழ் கரோனா தொற்று உள்ளது.4 மாவட்டங்களில் 100-க்கு மேல் தொற்று பதிவாகிறது. கூட்டத்தை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றாததால் சென்னை, ஈரோடு,தஞ்சாவூர், புதுக்கோட்டை போன்றமாவட்டங்களில் தொற்று அதிகமாகிறது. இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும் தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குவது வருத்தம் அளிக்கிறது.
சென்னையில் கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆடி மாதம் கூழ் ஊற்றும் நிகழ்வில்300 பேர் கூடிய கூட்டத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் பலர் தடுப்பூசி போடாமல் உள்ளனர். அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். சர்க்கரை நோயாளியான அவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.
கரோனா பாதிப்பு அதிகமாகி வருவதால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். 38 சதவீதம் பேர்தான் முகக்கவசம் அணிகிறார்கள். 62 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய மறுக்கின்றனர். அனைத்து மத ஆலயங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை. தடுப்பூசி குறைவாக போட்டுக்கொண்ட இடங்களைக் கண்டறிந்து அங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்படும். எந்த விதமான கூட்டங்களிலும் தடுப்பூசி போடாமல், கரோனாதடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாமல் இருந்தால் தொற்று பரவல் அதிகரிக்கும்.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கையை 500-க்கு கீழ் கொண்டுவர பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஈரோடு,கோவையில் தொற்று அதிகமாக உள்ளது. அந்த இடங்களில் அதிக அளவில் தடுப்பூசிகள் போடுமாறு அறிவுறுதியுள்ளோம். மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தொற்று வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முழுக்கவச உடை, கையுறையை போட்டிருக்க வேண்டும்.