

மத்திய, மாநில அரசுகளை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பேசிய சம்பவத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் கைதான கிறிஸ்தவ இயக்கச் செயலாளர் ஸ்டீபனுக்கு நாகர்கோவில் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய மாநில அரசுகள், மற்றும் இந்து வழிபாட்டு முறை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ. போன்றோரை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா விமர்சித்து பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஜார்ஜ் பொன்னையா, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் ஆகியோர் மீது அருமனை போலீஸார் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு குழித்துறை, நாகர்கோவில் ஆகிய நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நேற்று மதுரை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
தூத்துக்குடி சிறையில் இருந்த ஸ்டீபனின் மனுவும் குழித்துறை நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் அவர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அருள்முருகன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டீபனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் மதப் பிரச்சினைகளை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு வழங்கிய நிபந்தனை ஜாமீனிலும், இதே திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.