

சிவகங்கை மாவட்டத்தில் பணம் இரட்டிப்பு ஆகும் என்று ஆசை காட்டி 111 பேரிடம் ரூ.7.48 கோடி வசூலித்து மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைக்குடி களனிவாசலைச் சேர்ந்த ஜி.கீதா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''என் வீடு அருகே வசிக்கும் சேமசுந்தரம், அவருக்குத் தெரிந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வி ஆகியோர் என்னிடம் பெருந்துறை குன்னத்தூரில் தர்மராஜ் என்பவர் நடத்திவரும் ‘கே.எம்- சாமி குரூப் ஆப் பிஆர்ஐ’ என்ற நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரட்டிப்புப் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறினர். முதலீட்டாளர்களைச் சேர்த்துவிட்டால் 10 சதவீத கமிஷன் தருவதாகவும் கூறினர்.
இதை நம்பி 2020 ஜூலை மாதம் முதல் நான், நண்பர்கள், உறவினர்கள் என 111 பேர் சேர்ந்து ரூ.7.48 கோடி பணம் முதலீடு செய்தோம். நான் மட்டும் ரூ.23,80,000 முதலீடு செய்தேன். எனக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முடிந்ததும் 10 சதவீத கமிஷன் தருவதாக தர்மராஜ் கூறினார். சில முதலீடுகளுக்கு 6 மாத காலக்கெடு நெருங்கியதும் முதலீட்டுத் தொகையைக் கேட்டபோது தராமல் இழுத்தடித்தனர்.
பின்னர் விசாரித்தபோது சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த பலரிடம் ரூ.400 கோடி வரை வசூல் செய்து மக்களை ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தேன்.
அவர் என் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க சிவகங்கை குற்றப்பிரிவு டிஎஸ்பி மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். போலீஸார் என்னையும், தர்மராஜ் உள்ளிட்ட 3 பேரையும் அழைத்து விசாரித்தனர். இருப்பினும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நிதி மோசடி தொடர்பாக தர்மராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக சிவகங்கை எஸ்பி, குற்றப்பிரிவு டிஎஸ்பி, குற்றப்பிரிவு ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப். 6-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.