

மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்கள் வெடி வெடித்து, இனிப்பு வழங்கி இன்று (ஆகஸ்ட் 11) கொண்டாடினர்.
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது கங்கை கொண்ட சோழபுரம். 11-ம் நூற்றாண்டு முதல் 14-ம் நூற்றாண்டு வரை, கடல் கடந்து பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் தலைநகராக விளங்கியது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன், தனது ஆட்சிக் காலத்தில், ஆயிரம் வருடத்துக்கு முன்பு கங்கை வரை படையெடுத்துச் சென்று, வடபுறத்து மன்னர்களை வெற்றி கொண்டதன் அடையாளமாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை உருவாக்கி, தஞ்சாவூர் பெரிய கோயில் வடிவமைப்புடன் கூடிய பிரகதீஸ்வரர் கோயிலைக் கட்டினார். இந்தக் கோயிலை, ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பு உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ராஜராஜ சோழனின் சதய விழாவை அரசு விழாவாகத் தமிழக அரசு எடுத்து நடத்துவதுபோல், கடல் கடந்து உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளை தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்து ஆட்சி புரிந்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளையும் அரசு விழாவாக நடத்த வேண்டும் எனக் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழு மற்றும் கிராம மக்கள், வரலாற்று ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், அரியலூர் மாவட்டப் பொதுமக்கள் எனப் பலரும் பல வருடங்களாகக் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுவினர் மனுவும் அளித்தனர். இந்நிலையில், ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை நட்சத்திர விழா, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து கங்கை கொண்ட சோழபுரம் கிராம மக்கள், திமுக ஒன்றியச் செயலாளர் மணிமாறன் தலைமையில் கோயில் முன்பு வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை இன்று வழங்கினர்.
அதேபோல், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில் செயலாளர் மகாதேவன் தலைமையில், நிர்வாகிகள் ராமதாஸ், செந்தில் குமார், பாண்டியன், மோகன், முல்லை நாதன் உட்படப் பலரும் வெடி வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.