'மிஸ் தமிழ்நாடு' அழகிப் பட்டம் பெற்ற மதுரைப் பெண்

டெல்லி ஆக்ராவில் நடந்த ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற மாணிகா.
டெல்லி ஆக்ராவில் நடந்த ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்ற மாணிகா.
Updated on
1 min read

டெல்லி ஆக்ராவில் நடந்த ‘மிஸ் இந்தியா’ அழகிப் போட்டியில் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தைப் பெற்று மதுரைப் பெண் அசத்தியுள்ளார்.

டெல்லி ஆக்ராவில் உள்ள ரெட் ட்ரீட் ஓட்டலில் ‘ஸ்டார் லைஃப்’ என்ற அமைப்பு சார்பில் ‘மிஸ்டர் இந்தியா’ மற்றும் ‘மிஸ் இந்தியா’ 2020-2021 ஆணழகன், அழகிப் போட்டிகள் நடந்தன. ஒரு வாரம் இந்தப் போட்டிகள் நடந்தன.

பல்வேறு கட்டத் தேர்வுகள் அடிப்படையில் இந்தப் போட்டிக்கான பங்கேற்பார்கள் தேர்வு செய்யப்பட்டனர். மிஸ் இந்தியா பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி உள்பட நாடு முழுவதும் இருந்து 30 பெண்கள் கலந்துகொண்டனர். இதில், தமிழகம் சார்பில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை புதுதாமரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிகா (22) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போட்டியின் முதல் சுற்றில் சுய மதிப்பீடு, கேள்வி பதில், தனித் திறமைகளை வெளிப்படுத்துதல், கான்செப்ட் போட்டோஷூட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றி பெற்ற மாணிகா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். அதில், காஸ்டியூம் டிசைனர் வழங்கும் ஆடைகளை அணிந்து போட்டியில் வாக் சென்றது, கலாச்சார ஆடைகளில் பார்வையாளர்களைக் கவரும் போட்டிகளிலும் பங்கேற்றது எனச் சிறப்பாகச் செயல்பட்டார்.

ஆனாலும், மதுரையைச் சேர்ந்த மாணிகாவுக்கு இதுதான் அழகிப் போட்டியின் முதல் போட்டி என்பதால் மிஸ் இந்தியா பட்டத்தைத் தவறவிட்டார். ஆனால், இந்தப் போட்டிகளில் அவரது சிறப்பான திறமைகளை மதிப்பிட்டு ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டம் வழங்கப்பட்டது.

‘மிஸ் இந்தியா’ போட்டியில் சிறப்பாகச் செயல்படுகிறவர்களை கவுரவிக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களை அடையாளப்படுத்தி அவர்களுக்கு இதுபோல் அழகிப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்தப் போட்டியிலும் நாடு முழுவதும் ஏராளமான மாநிலப் பெண்கள் கலந்துகொண்டாலும், மிஸ் இந்தியா பட்டத்தைத் தவிர மிஸ் தமிழ்நாடு, மிஸ் மகாராஷ்டிரா, மிஸ் கர்நாடகா ஆகிய மூன்று பட்டங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதில் மதுரையைச் சேர்ந்த மாணிகா ’மிஸ் தமிழ்நாடு’ பட்டம் பெற்று அசத்தியுள்ளார். மாணிகா, பிடெக் தகவல் தொழில்நுட்பம் முடித்துள்ளார். மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பதே அவரது குறிக்கோள் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in