ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்

ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: முதல்வர் ஸ்டாலின்
Updated on
1 min read

மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை தினம், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:

''அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். முதலாம் இராஜேந்திர சோழனின் காலம் முதல் சோழர்களின் கலை மற்றும் கட்டிடக் கலைகளின் அழகிய தொகுப்பாகவும், வாழும் வரலாறாகவும் விளங்குகிறது. அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பினைக் கண்டுகளித்திட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை தினமானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமரிசையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மாவட்ட அளவில் கொண்டாடப்படுகிற இவ்விழாவினை அரசு விழாவாகக் கொண்டாட அப்பகுதி மக்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சார்பில் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இக்கோரிக்கையினைக் கனிவுடன் பரிசீலித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினைச் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்''.

இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in