

பணி ஓய்வுக்குப் பின்பும் ஓய்வெடுக்காமல் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என நினைப்பவர்கள் வரிசையில் உடுமலையைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் 6 ஆண்டுகளுக்கு மேலாக 60 வகையான மரம், செடி, கொடி வகைகளை மாடித் தோட்டத்தில் வளர்த்து பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
உடுமலையில் அரசு தொழிலாளர் நலத்துறையில் ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் வேலுச்சாமி (66). ஓய்வு பெற்ற பின்பு வீட்டில் முடங்கிக் கிடக்க மனமில்லாத இவர், வீட்டில் பயன்படுத்திய பொருள்களைக் கொண்டு மாடித்தோட்டம் அமைக்கத் தொடங்கினார். அதன் விளைவாக தற்போது பல வகைக் காய்கறி, கீரை வகைகள், பழ வகைகள், முருங்கை, மா, கொய்யா, மாதுளை, சீதா, திராட்சை, பூச்செடிகள் என 60-க்கும் மேற்பட்ட மரம், செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறார். அத்துடன் பாரம்பரிய நாட்டுக் கோழி வகைகளையும் வளர்த்து மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
இதுகுறித்து அவர் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, ''நான் பணி ஓய்வு பெற்றபின் வீடு கட்டும் பணியைத் தொடங்கினேன். அப்போது மேல் மாடியில் இருந்து அதிக சூடு பரவியது. அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்ற ஆலோசனைக்குப் பின் மாடித்தோட்டம் அமைக்கும் முடிவுக்கு வந்தேன். செடிகள் வளர்க்கத் தொடங்கிய பிறகு வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைத்ததோடு, வீட்டுக்குள் வெப்பம் ஏற்படவில்லை. உடன் நாட்டுக் கோழிகளையும் வளர்க்கிறேன்.
அவற்றுக்கு, வீட்டில் விளையும் கீரை மற்றும் வெங்காயச் செடிகளை உணவாக அளிக்கிறேன். அதன் மூலம் அவை ஆரோக்கியமான முட்டைகளைத் தருகின்றன. மஞ்சள் செடி, கேரட், சோம்பு, புதினா, வல்லாரை, தூதுவளை, பொன்னாங்கன்னி, மணத்தக்காளி, தண்டங்கீரை, சிறுகீரை, முள்ளங்கி, அகத்தி, முருங்கை, மாதுளை, சீதாப்பழம், டிராகன்ஃப்ரூட், செங்கரும்பு, உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, முருங்கை, பன்னீர் திராட்சை, வாழை எனப் பலவகையான மரம், செடிகளை எனது மாடித்தோட்டத்தில் காணலாம்.
பொழுதுபோக்குக்காக இதைச் செய்யத் தொடங்கினேன். இங்கு விளையும் பொருட்களை எனது குடும்பத் தேவைக்குப் போக, மற்றவர்களுக்கும் கொடுத்து உதவுகிறேன். வீணாகிய பழைய டயர், சூட்கேஸ், காலி கேன்கள் ஆகியவற்றையும் செடி வளர்க்கப் பயன்படுத்துகிறேன். எனது முயற்சியைப் பலரும் பாராட்டி ஊக்கப்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டால் தற்சார்பு வாழ்க்கை மேம்படும்'' என்று வேலுச்சாமி தெரிவித்தார்.