

கரூர் வெண்ணெய்மலையில் உள்ள ரோட்டரி மைதானத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டத்தில் இன்று ஆய்வு மேற்கொள்வதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்றிரவு கரூர் வந்தார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகேயுள்ள பெரியவளையப்பட்டி துணை சுகாதார நிலையத்தில் தொற்றா நோயாளிகளுக்கு மருந்துப் பெட்டி வழங்குதல், இயன்முறை சிகிச்சை வலி மற்றும் ஆதரவு தேவைப்படுபவர்களைப் பார்வையிடுதல், கரூரில் உள்ள தனியார் அரங்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கரூர் நகராட்சி பல்நோக்கு அரங்கத்தில் சிஎஸ்ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனை வாயிலாக தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தல், தடுப்பூசிக்காக சிஎஸ்ஆர் நிதி வழங்குதல், கரூர் பழைய அரசு மருத்துவமனையைப் பார்வையிடுதல், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்தல், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் உள்ள அரங்குகளைப் பார்வையிடுதல், கரோனா தொடர்பான அனைத்து அலுவலர்கள் கூட்டம் ஆகியவற்றில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கிறார்.
கரூரில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னதாக, இன்று (ஆக. 11-ம் தேதி) காலை கரூர் வெண்ணெய்மலையில் உள்ள ரோட்டரி மைதானத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டார். காலை 5.30 மணிக்குச் சென்றவர்கள் 6.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். காலை 4 மணி முதல் 8 மணி வரை நடைப்பயிற்சிக்காக இம்மைதானம் வழக்கமாகத் திறந்திருக்கும்.
வழக்கமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அங்கு சூப் வழங்கப்படும். இன்று வழங்கப்பட்ட நெல்லிக்காய் சூப்பை அங்கு வழக்கமாக நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுடன் சேர்ந்து அமைச்சர்களும் இருவரும் அருந்தினர். இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பதிவிட்டுள்ளார்.