

சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகரைச் சேர்ந்த பார்வதி (58), மீஞ்சூரில் உள்ள தனது மகளைப் பார்ப்பதற்காக கடந்த 19-ம் தேதி அரசுப் பேருந்தில் சென்றார். அப்போது, பேருந்தில் பயணம் செய்த 3 பெண்கள் பார்வதியிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவர்கள் மூவரும் பார்வதியின் பையை எடுத்துக் கொடுத்ததுடன், கவனமாகச் செல்லுமாறு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர். சிறிது நேரத்துக்குப் பின்னர்தான், தான் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டிருந்ததை பார்வதி அறிந்தார்.
இதேபோல, சூளை சுப்பாநாயுடு தெருவைச் சேர்ந்த காமாட்சியம்மாள்(70), மாதவரத்தில் ஆட்டோவில் சென்ற, ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரின் மனைவி ஜெயலட்சுமி ஆகியோரது நகைகளும் திருடப்பட்டன.
குறிப்பாக, திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம் பகுதிகளில் அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோக்களில் செல்லும் மூதாட்டிகளை குறிவைத்து, ஒரு கும்பல் நகைகளை திருடிவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நகை திருட்டில் ஈடுபடும் பெண்களைப் பிடிக்க திருவொற்றியூர் போலீஸார் தனிப்படை அமைத்தனர்.
கண்காணிப்பு கேமரா
நகை திருட்டு சம்பவங்கள் நடைபெற்ற இடம் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், மதுரையைச் சேர்ந்த சாந்தி(35), சின்னத்தாய்(30), கவுரி(41) ஆகியோர், சென்னையின் பல்வேறு பகுதிகளில் பேருந்து, ஆட்டோவில் பயணம் செய்த மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி, நகைகளைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.