

சென்னையை சேர்ந்த சின்னத் திரை நடிகர் பஞ்சாபகேசன் (85), அவரது மனைவி கவுரி ஆகியோருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் செங்கல்பட்டு அருகே வள்ளிபுரம் கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் ஆகும். இந்த நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து திருக்கழுக்குன்றம் சார்-பதிவாளர் அலுவலகம் மூலம் பத்திரப் பதிவு செய்துள்ளனர்.
எனவே, இதை மீட்டுத் தரும்படி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் கே.பொன்னுசாமி தலைமையில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு காவல் ஆய்வாளர் டி.கே.குமரன், உதவி ஆய்வாளர்கள் சசிகுமார், ஜெயமோகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப் படையினர் தீவிரவிசாரணை மேற்கொண்டதில் போலி ஆவணங்கள் மூலம் நிலம்பத்திரப் பதிவு செய்து அபகரிக் கப்பட்டது தெரியவந்தது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பெருமாள் (44), ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த அம்ரூத் குமார் (48), மீஞ்சூரை சேர்ந்த பாலாஜி (41), திருப்போரூர் அருகே ஒரகடம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை (46) ஆகியோர் மோசடியாக போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீஸார் செங்கல் பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.
இதில் வழக்கறிஞர் பெருமாள் கரோனா உறுதி செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, இந்த பணியில் ஈடுபட்ட காவல் துறையினரும் தங்களை தனி மைப்படுத்திக் கொண்டனர்.
போலி ஆவணங்கள் மூலம்பத்திரப்பதிவு செய்ய உதவியாக இருந்த சார்-பதிவாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.