

காஞ்சிபுரத்தில் ஏனாத்தூர் பகுதியில் உள்ள நகராட்சி குடியிருப்பு பகுதிகளை தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் எம்.வெங்கடேசன் நேற்று ஆய்வுசெய்தார். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆணையத்தலைவர் எம்.வெங்கடேசன்தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். பணியாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் விடாமல் அரசே எடுத்து செய்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழகஅரசு நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து ஆய்வு செய்ய ஆணையம் அமைத்துள்ளது. அதேபோல் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்வது குறித்து ஆய்வு செய்யவும் ஓர் ஆணையம் அமைக்க வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி பணியாற்றும் போது விஷ வாயு தாக்கி இறக்கும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவ்வாறு இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் இதுபோன்ற தொழில்களுக்கு ரோபோக்களை பயன்படுத்துவது குறித்து ஆட்சி யர் முடிவெடுக்க வேண்டும்.
தூய்மைப் பணியாளர்களுக்கு மாதாந்திர சம்பள பட்டியலை வழங்க வேண்டும். அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி செய்து தர வேண்டும்’’ என்றார்.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் மா.ஆர்த்தி, காவல் கண்காணிப்பாளர் சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குர் தேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.