

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், திமுக உறுப் பினர் துரைமுருகன் எழுந்து, ‘‘அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்’’ என்றார். வி.சி.சந்திர குமார் (தேமுதிக), அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.
அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘இதே கோரிக்கைக்காக பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுத்துள்ளனர். இது எனது ஆய்வில் உள்ளது. எனவே, அமைதியாக அமருங்கள்’’ என்றார்.
அதை ஏற்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று, இப்போதே விவாதிக்க அனு மதிக்க வேண்டும் எனக் கோரி கோஷமிட்டனர். திமுக உறுப் பினர்கள் அனைவரும் பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
அவர்களுக்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர் தனபால், அனைவரும் அமைதியாக இருக் கையில் அமருமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் திமுக உறுப்பினர்களும், அடுத்தடுத்து தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன் (திமுக), அ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), எம்.ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோர், ‘‘முக்கிய பிரச்னை குறித்து பேச பேரவையில் அனுமதி கிடைக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தோம்’’ என்றனர்.
தமாகாவில் இணைந்துள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் என்.ஆர்.ரங்கராஜன், ஜான் ஜேக்கப், மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யாமல் பேரவை நடவடிக்கை களில் பங்கேற்றனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேர வைக்கு வந்திருந்த பாமக உறுப்பினர் காடுவெட்டி குருவும் நேற்று வெளிநடப்பு செய்தார். வெளிநடப்பு செய்தவர்கள் அனைவரும் சிறிது நேரத்துக்குப் பிறகு பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.