இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி படம் அச்சிடக் கோரிய மனு தள்ளுபடி

இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி படம் அச்சிடக் கோரிய மனு தள்ளுபடி
Updated on
1 min read

இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப்படம் அச்சிடக்கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

’’இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்தை அச்சிட உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எனது கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில் எனது கோரிக்கையை நிராகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்து, இந்திய ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவப் படத்தை அச்சிட உத்தரவிட வேண்டும்’’.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ’’இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ள மகாத்மா காந்தி உருவப் படத்தை மாற்றியமைப்பது குறித்து மத்திய அரசு, ரிசர்வ் வங்கி குழு 2010 அக்டோபரில் பரிசீலனை செய்தது. பின்னர் இந்திய ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தி உருவப் படத்தைத் தவிர வேறு உருவப் படங்கள் இடம் பெறக்கூடாது எனக் குழு முடிவு செய்தது. இந்த முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது’’ என்றார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ’’ரூபாய் நோட்டுகளில் வேறு இந்தியத் தலைவர்களின் உருவப் படங்கள் இடம் பெற்றால் அவர்கள் மீது மதம், சாதிச் சாயம் பூசப்படும். இதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in